இன்றைய தியானம்(Tamil) 01.01.2025
இன்றைய தியானம்(Tamil) 01.01.2025
விசுவாசத்தை செப்பனிடு
"...நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்" - யோவான் 11:40
மரித்த சகோதரனுக்காக சகோதரிகள் அழுது கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அழுவதைப் பார்த்து அவர்கள் உடனிருப்பவரும் அழுகிறார். சகோதரனை அடக்கம் செய்த கல்லறையினிடத்திற்கு வந்தனர். அழும் சகோதரிகளிடம் அவர் சொல்கிறார், நீ எதிர்பார்க்கும் ஆசீர்வாதம் இந்தக் கல்லுக்குப் பின் உள்ளது. இந்த சகோதரிகள் சொல்கின்றனர் நாலு நாளாயிற்றே , நாறுமே. அவர் சொல்கிறார், கல்லைப் புரட்டுங்கள். கல் புரட்டப்பட்டது! அவர் மரித்தவனின் பெயரைச் சொல்லி அழைக்கிறார். அவன் உயிரோடு வருகிறார். ஆம், அவர் தான் லாசரு, அந்த நபர் இயேசுகிறிஸ்து, சகோதரிகள் மார்த்தாள், மரியாள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுடன் இருக்கிறார். ஒரு அற்புதத்தை உங்கள் வாழ்வில் செய்ய ஆயத்தமாயிருக்கிறார். தம் கரத்தின் வல்லமையை காண்பிக்க ஆயத்தமாயிருக்கிறார். அதோடு மட்டுமன்று நம் துக்கம், துன்பம், வேதனை எல்லாவற்றையும் அறிந்தவராயிருக்கிறார். அவற்றிற்கான பதிலும், வழியும் அவரிடம் உண்டு. மார்த்தாள், மரியாள் அழுதபோது அவர்களோடு இணைந்து இயேசு கண்ணீர் விட்டார். மனிதர்கள் கண்ணீர் விட்டு கடந்து சென்று விடுவர். இன்றைய கால சூழ்நிலையில் நம் நிலை கண்டு பரிதாபப்படுகிறவர்கள் தான் அதிகம். நாம் அழும்போது இணைந்து அழுகிறவர்கள் சிலரே. ஆனால் இயேசு உங்களுடன் அழுகிறவர் மாத்திரமல்ல, அழக்கூடிய சூழ்நிலையையே மாற்றி விடுகிறார். ஆனால் அற்புதம் என் வாழ்வில் நடைபெறவில்லையே என கேட்கிறீர்களா? அதற்கு கல்லைப் புரட்ட வேண்டும். அவிசுவாசம் என்ற கல் அற்புதத்தை பெற முடியாதபடி தடையாயிருக்கிறது. இயேசு சொல்கிறார், "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்." (யோவான் 11:25) என்கிறார். அப்படியானால் அற்புதத்தைப் பெற முடியும். மார்த்தாள் நாறுமே என்ற போது, நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று இயேசு சொன்னார்.
புது ஆண்டு பிறந்து விட்டது. இந்த ஆண்டு எப்படி இருக்குமோ எனக்கு வழியேதும் இல்லையே? நான் நம்பியிருந்த யாவும் மரித்தது போல் ஆகிவிட்டதே நான் என்ன செய்ய என புலம்புகிறீர்களா? உங்களை நீங்களே ஆராய்ந்து உங்கள் விசுவாசத்தை செப்பனிட்டு, விசுவாசத்தோடு அவரை நோக்கிப் பாருங்கள். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று சொன்னவர் உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் உங்களுடனே கூட இருக்கிறார். அவர் நீங்கள் முடிந்தது இனி என் வாழ்வு நாறுமே என்றிருக்கிற இடத்தில் ஜீவன் தந்து, துவக்கம் தந்து கர்த்தரை மகிமைப்படுத்தும்படி செய்வார். அதற்கு நாம் நம்மை ஆராய்ந்து செப்பனிட வேண்டும். ஆசீர்வாதத்தை, அற்புதத்தை சுதந்தரிக்க விசுவாசத்தை செப்பனிடுங்கள். நான் எப்போதும் சொல்வது போல இப்பவும் சொல்கிறேன் உங்கள் வலது பக்கத்தில் கர்த்தர் இருக்கிறார். பிரச்சனை, குழப்பம், போராட்டங்கள் வரும்போது விசுவாசத்தோடு உங்கள் வலதுபக்கம் பாருங்கள். இயேசப்பா என்கூட இருக்கீங்கல்ல, நீங்க பார்த்துக்கோங்க . . . என அவரிடம் அர்ப்பணியுங்கள். தினம் தினம் அற்புதத்தைக் காண்பீர்கள்.
- K. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:
இவ்வாண்டில் நம் ஊழியங்களுக்காக, ஊழியர்களின் சுகத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864