இன்றைய தியானம்(Tamil) 31.12.2024
இன்றைய தியானம்(Tamil) 31.12.2024
ஸ்தோத்திரி
"கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக…” - சங்கீதம் 89:52
ஹோட்டலுக்கு சென்ற முதியவர், சாப்பிட்டு முடித்ததும் டீ சொல்லி விட்டு தட்டிற்குள் கிண்ணங்களை அடுக்கினார். அதற்குள் சர்வர் வந்து தட்டில் உள்ள இலைகளை ஒருபுறம் போட்டுவிட்டு, தட்டு, டம்ளர், கிண்ணங்கள் என எல்லாவற்றையும் தனித்தனியாக எடுத்துவிட்டு அந்த டேபிளையும் துடைத்து விட்டார். முதியவர் அந்த நபரை பார்த்து, இன் முகத்தோடு சிரித்துக் கொண்டே நன்றி என்றார். ஒரு சில வாரங்கள் கழித்து பஸ் ஸ்டாண்டில் ஒரே கூட்டம்! என்னவென்று கூட்டத்தை விலக்கி பார்த்தால், அந்த வயதானவர் மயக்கமடைந்து இருந்தார். ஒருவர் ஓடிச் சென்று தண்ணீர் பாக்கெட் வாங்கி தெளித்து பெரியவரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அமரச் செய்து சாப்பிடுகிறீர்களா? என்றார். முதியவர் நீ யாரப்பா? என்றார். போனவாரம் இதே ஹோட்டலில் உங்கள் இலைய எடுத்த என்னை பார்த்து நன்றி சொன்னீர்களே! அவன் தான் நான். என் வேலையில் யாரும் எனக்கு நன்றி சொன்னது கிடையாது. ஏன் என் முகத்தைக் கூட யாரும் பார்ப்பது கிடையாது. நான் எதிர்பார்க்கவுமில்லை. ஆனால் நீங்கள் சிரித்த முகத்தோடு எனக்கு நன்றி சொன்னதை என் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது என்றார்.
"எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது." என 1தெச. 5 :18ல் வாசிக்கிறோம். நாம் நன்றி செலுத்துவது தேவனுடைய விருப்பமாய் இருக்கிறது. ஆம், பத்து குஷ்டரோகிகளுக்கு தேவன் சுகம் கொடுக்கிறார். ஆனால் ஒருவன் மட்டும் வந்து தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்திய போது, அவர் வருத்தத்தோடு சுத்தமானவர்கள் பத்துப் பேர் அல்லவா! மற்ற ஒன்பது பேர் எங்கே? என்றார். ஸ்தோத்திரம் செய்யும்போது நாம் தேவனை மகிமைப்படுத்துகிறோம். இந்த ஆண்டு முழுவதும் நம் ஜீவனை மீட்டு காத்திருக்கிறார். ஆனாலும் எத்தனை பாடுகள் என நினைக்கிறீர்களா? சின்ன சின்ன காரியத்திலேயே சோர்ந்து உடைந்து போன நமக்கு நம்பிக்கை கொடுத்தாரே அதற்காக நன்றி செலுத்த வேண்டாமா? நம் விசுவாசத்தை கர்த்தரே காத்து வருகிறார். ஏனெனில் விசுவாசத்தை துவங்குகிறவரும், முடிக்கிறவரும் அவரே. (எபி. 12:1) எவ்வளவு பெலவீனப்பட்டாலும், நம் ஜீவனை மீட்டு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறார். மரணத்தின் விளிம்பில் உள்ளேன் என நீங்கள் சொன்னாலும் இன்னும் நம் ஜீவனை தந்துள்ளாரே ஸ்தோத்திரம் செய்யுங்கள். எல்லாவற்றையும் இழந்த போதும் ஸ்தோத்திரம் செய்த யோபு இரட்டிப்பான நன்மையைப் பெற்றுக் கொண்டார் அல்லவா.
பிரியமானவர்களே, இந்த வருடத்தின் துவக்கத்தை பார்த்த சிலர் முடிவைக் காணவில்லை. ஆனால் தேவன் நம்மை ஜீவனோடு வைத்துள்ளார். இதற்கு நாம் ஸ்தோத்திரம் செய்ய கடமைப்பட்டுள்ளோம். இவ்வருடத்தில் பட்ட கஷ்டங்கள், வேதனைகள் தான் ஞாபகம் வருகிறது என்றாலும் நம் ஜீவனுக்காக நாம் அவரிடம் பெற்ற நன்மைக்காக ஸ்தோத்திரம் செலுத்தி பாருங்கள். எரிகோ போன்ற கஷ்டங்கள், வேதனைகள் இருந்த இடம் தெரியாமல் போகும், புதிய ஆண்டில் புதிய நன்மையோடு நுழையலாம்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
புதிய ஆண்டிற்கான தீர்மானங்கள், இலக்குகளை திட்டமிடுவதில் நம் இயக்க தலைவர்களோடு தேவன் உடன் இருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864