இன்றைய தியானம்(Tamil) 29.12.2024 (Kids Special)
இன்றைய தியானம்(Tamil) 29.12.2024 (Kids Special)
பாலாவும் – குதிரையும்
"நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது" - நீதிமொழிகள் 23:18
பாலா தனது அப்பா அம்மாவிற்கு ஒரே பிள்ளை, செல்லமாக வளர்க்கப்பட்டான். அப்பா தொலை தூரத்தில் வேலை பார்த்து வந்ததால் வருடத்திற்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார். வரும் பொழுதெல்லாம் அவனுக்கு தேவையானதெல்லாம் வாங்கி வருவார். அவர் வந்து விட்டு திரும்பும் வரை அவனுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.
வருடங்கள் கடந்தன பாலா வளர்ந்து இளைஞன் ஆனான். அவன் வயது இளைஞர்கள் எல்லாம் குதிரையை வைத்திருந்தார்கள். அது அவர்களுக்கு பெருமையாக இருந்தது. பாலாவுக்கும் குதிரையில் செல்ல ஆசை வந்தது. அப்பாவிடம் சொல்லி அனுப்பினான். அப்பா எனக்கு சீக்கிரம் குதிரை வாங்கி வருவார் என்று ஆவலுடன் காத்திருந்தான். ஒரு நாள் அவன் அப்பாவின் நெருங்கிய நண்பர் குதிரையில் அவன் வீட்டின் முன் நின்றார். உடனே பாலா ஆஹா! அப்பா தனக்கு குதிரை வாங்கி அனுப்பியிருக்கிறார் என்று நினைத்து வேகமாக சென்றான். அவரோ தம்பி நீ புறப்படு என்னுடன் ஒரு மாதம் தங்க வேண்டும் என்றார். பாலாவும் தனக்கு குதிரை வாங்கத்தான் தன்னை அழைத்துச் செல்கிறார் என்று நினைத்து அவருடன் சென்றான். அவர் ஒரு பெரிய இடத்திற்கு அழைத்துச் சென்று வேகமாக ஓடச் சொன்னார். பின்பு குதிரையோடு சேர்ந்து ஓடச் சொன்னார். இப்படி ஒரு வாரம் ஒன்றுமே புரியாமல் ஓடிக் கொண்டிருந்தான். எலும்பு முறிவுக்கு எப்படி மருந்து கலப்பது, தசை பிடிப்பிற்கு எப்படி மருத்துவம் பார்ப்பது, விஷக்கடிக்கு என்ன செய்வது என்று சில பச்சிலைகளை அடையாளப்படுத்தி அதை எப்படி எந்த நேரத்தில் பயன்படுத்துவது என்று மருத்துவம் கற்றுக் கொடுத்தார். பாலாவுக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. ஆகிலும் குதிரைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டான். மறுநாள் காலை தம்பி எல்லாம் முடிந்தது நீ வீட்டுற்கு போகலாம் என்று வெறுமையாய் அனுப்பிவிட்டார். பாலாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான். அன்றிலிருந்து அவனுக்கு ஒழுங்கான தூக்கம் இல்லை.
சில நாட்களுக்குப் பிறகு குதிரை கனைக்கும் சத்தம் கேட்டு கண்ணை கசக்கிய படியே வெளியே வந்தான். வந்தவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அங்கே அவன் அப்பா உயரமான வெள்ளை நிற அரேபிய குதிரையுடன் நின்று கொண்டிருந்தார். ஓடிப்போய் அப்பாவை கட்டிப்பிடித்துக் கொண்டான். இதை ஏன் எனக்கு உடனே வாங்கி கொடுக்கவில்லை, ஏன் காலம் தாழ்த்தி என்னை கஷ்டப்படுத்தினீர்கள் என்றான். உடனே அப்பா நீ சாதாரண குதிரை தான் கேட்டாய். ஆனால் நானோ உயர்ரக குதிரையை வாங்கிக்கொடுக்க விரும்பினேன். ஆகவே என் நண்பனை அனுப்பி உனக்கு பயிற்சி கொடுக்கச் சொன்னேன். இப்போது குதிரையை உன்னிடம் கொடுத்தால் நீ தனியாக சமாளித்து விடுவாய். நீ பயிற்சி எடுப்பதற்கு தான் இத்தனை காலம் தாமதித்தேன் என்றார்.
அன்பான தம்பி தங்கச்சி! பாலாவை போலத்தான் நாமும் அநேக நேரங்களில் கேட்டவுடன் உடனே கிடைத்து விட வேண்டும் என்று நினைக்கிறோம். அடம் பிடிக்கிறோம். ஆனால் இயேசப்பாவுக்கு எதை எப்பொழுது தரவேண்டும் என்று தெரியும். சரியான நேரத்தில் தந்திடுவார். அதுவரையிலும் காத்திருக்க வேண்டும் O.k வா.
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864