இன்றைய தியானம்(Tamil) 10.11.2024 (Kids Special)
இன்றைய தியானம்(Tamil) 10.11.2024 (Kids Special)
வாழை மரமா? தென்னை மரமா?
"இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார்" - சங்கீதம் 12:3
ஜான் Uncle வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான ஒரு அழகிய தோட்டம் இருந்தது. அதில் மாமரம், தென்னை மரம், கொய்யா மரம், பலாமரம் என்று நிறைய மரங்கள் இருந்தது. ஜான் Uncle பிள்ளைகள் டாப்னி, டார்வின் இருவரும் அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தார்கள். அவர்களுக்கு மரம், செடி வளர்ப்பது என்றால் அலாதி பிரியம்.
ஒரு நாள் அவங்க ஊருக்கு ஒரு வியாபாரி மரக்கன்று விற்க வந்தார். உடனே டாப்னி, டார்வின் இருவரும் தங்கள் அப்பாவை அழைத்துக் கொண்டு போய், வியாபாரியிடம் இருந்து ஒரு வாழைக்கன்று வாங்கி வந்து, தோட்டத்திலுள்ள தென்னங்கன்று அருகே நட்டு வைத்தார்கள். நாட்கள் கடந்தன. வாழைக்கன்று, தென்னங்கன்று அளவிற்கு வளர்ந்து விட்டது. வளர்ந்த வாழைக்கன்றுக்கு பெருமை தாங்க முடியவில்லை. பக்கத்திலிருந்த தென்னங்கன்றைப் பார்த்து ஏய், தென்னை மரமே! நீ இந்த தோட்டத்தில் எவ்வளவு நாளாக இருக்கிறாய் என்று கேட்க, தென்னை மரம் தாழ்மையோடு நான் ஒரு வருடமாக இருக்கிறேன் என்றது. உடனே வாழைமரம் ஒரு வருடமாக இருக்கிறாய், ஆனால் இவ்வளவுதான் வளர்ந்திருக்கிறாய் உனக்கு ஏதாவது வியாதி இருக்கிறதா என்று கேலி செய்தது. வாழைமரம் இன்னும் வளர்ந்தது. அதிலிருந்து ஒரு குலை வெளிப்பட்டது. மற்றும் நீளமான இலைகள், பூ, காய் என்று அந்த மரத்தையே மெருகூட்டியது. டாப்னி, டார்வின் இருவரும் வாழை மரத்திலுள்ள குலையை பார்த்து மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள். பின்பு தனது அப்பாவையும் அழைத்து வந்து அந்த வாழைக் குலையை காட்டினார்கள். அவரும் வாழை மரத்தை பிடித்துக் கொண்டு, சரியான பருவம் என்றார். தென்னை மரத்தையோ தொட்டுக்கூட பார்க்கவில்லை. இப்போது வாழை மரத்தின் பெருமை வான் உச்சிக்கு போய்விட்டது. தென்னை மரத்தை பார்த்து ஏளனமாய் சிரித்தது. தென்னை மரமோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தது. மறுநாள் காலை அந்த வீட்டு வேலைக்காரர் வந்தார். வாழைக்குலையை பிடித்து அறுத்து எடுத்தார். இப்போது வாழைமரம் கதறியது. பின்பு கத்தியை எடுத்து வாழை மரத்தை வெட்டிப்போட்டார். அவ்வளவுதான் வாழை மரத்தின் பெருமை ஒன்றுமில்லாமல் போய்விட்டது. தென்னை மரமோ நிதானமாய் வளர்ந்து தன்னை நட்டு வைத்தவருக்கு இளநீரும், தேங்காயும் கொடுத்துக் கொண்டே இருந்தது.
அன்பு தம்பி தங்கச்சி! நீயும் உனக்கு இருக்கும் அழகு, அறிவு, திறமை, தாலந்து இவைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களை அற்பமாக எண்ணிவிடாதே. தாழ்மையோடு இருந்து இயேசப்பாவுக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ள பிள்ளையாய் வாழ்ந்து காட்டு. O.k
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864