இன்றைய தியானம்(Tamil) 08.11.2024 (Gospel Special)
இன்றைய தியானம்(Tamil) 08.11.2024 (Gospel Special)
காலமும் கரிசனையும்
"அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்" - மத்தேயு 24:12
கங்கை நதியோரம், ஆண்டவருடைய பணியை செய்வதற்காக இளைஞர் ஒருவன் நடந்து சென்று கொண்டிருந்தான். ஒரு பெண் அவனை கடந்து சென்றாள். நோய்வாய்ப்பட்டு மெலிந்த ஒரு குழந்தையை இடுப்பில் சுமந்து கொண்டும், கொழுகொழு என சுமார் மூன்று வயது குழந்தையை கையில் பிடித்தபடியும் நடந்து கொண்டிருந்தாள். இளைஞன் ஊழியத்தை முடித்து திரும்பும் போது மீண்டும் அந்தப் பெண் எதிர்பட்டாள். கையில் பிடித்திருந்த அழகான குழந்தை இல்லை. இளைஞர் பெண்ணிடம் “எங்கே உன் மற்றொரு குழந்தை? என்று கேட்டான்”. கங்காதேவிக்கு கொடுத்து விட்டேன் என்றாள். அவன் அதிர்ச்சி அடைந்தான். “உன் கையில் இருக்கிற குழந்தையை கொடுத்திருக்கலாமே!” என்றான். என் தெய்வத்திற்கு சிறந்ததை தான் கொடுக்க வேண்டும் என்றாள். அவளுக்கு இயேசுகிறிஸ்துவின் சிலுவை பலியை எடுத்துக் கூறி நற்செய்தியைச் சொன்னான். “நீ ஏன் முதலிலேயே இதைச் சொல்லவில்லை. என் பிள்ளையை இழந்து விட்டேனே” என கதறினாள். அவள் அறியாமையை நீக்க ஆள் இல்லாததால் பிள்ளையை இழந்தாள்.
இப்பொழுது நாம் வாழ்கின்ற இந்த காலம் உலகத்தின் இறுதி காலம். மத்தேயு 24 ஆம் அதிகாரத்தில் உம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? என்று சீஷர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு கிறிஸ்து கூறிய பதில்தான் இந்த அதிகாரத்தில் உள்ளது. அக்கிரமம் மிகுதியாகும். அநேகரின் அன்பு தணிந்து போகும். (12) பஞ்சம், கொள்ளைநோய், பூமியதிர்ச்சிகளும் உண்டாகும் (7) கள்ள தீர்க்கதரிசனம், வஞ்சகம் நடக்கும் (24). ஆம், தேசத்தில் அக்கிரமம் மிகுதியாகிறது பச்சிளம் குழந்தைகளை கூட பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமையை பார்க்கிறோம். பெற்றோர் பிள்ளைகளைக் கொலை செய்வதும், பிள்ளைகள் பெற்றோரைக் கொலை செய்வதுமான கொடுமைகள் நடைபெறுகின்றன. இப்படி அக்கிரமங்களை அடுக்கிக் கொண்டே போகலாம், காரணம் அன்பு தணிந்து போய்விட்டது. அவர்களுக்கு அன்பராம் இயேசுவை அறிவிக்க வேண்டும். அது நம் கடமை.
மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல் இருந்த ஜனங்களைக் கண்டு இயேசு மனதுருகி அநேகக் காரியங்களை உபதேசிக்க தொடங்கினார். (மாற்கு 6:34) அதுபோல அழிந்து கொண்டிருக்கும் ஜனங்களைக் கண்டு நாம் மனதுருகி அவர்களுக்கு மீட்பராம் கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும். அப்பொழுது தேவனின் கற்பனையைக் கைக்கொள்கிறவர்களாக இருப்போம். முதல் கற்பனை முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும் தேவனிடத்தில் அன்பு கூற வேண்டும். இரண்டாம் கற்பனை உன்னிடத்தில் அன்பு கூறுகிறது போல பிறரிடத்தில் அன்பு கூறுவாயாக என்பதே. எனவே மற்றவர்களுக்கும் பேரின்ப வாழ்வைப் பெறும்படி நற்செய்திப் பணி செய்வோம். காலத்தை உணர்வோம்! மற்றவர்களைக் குறித்து கரிசனை கொள்வோம்! விரைந்து செயல்படுவோம்!
- Mrs. வனஜா பால்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் நடக்கும் டியூஷன் சென்டரில் படிக்கும் பிள்ளைகளின் ஞானத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864