இன்றைய தியானம்(Tamil) 27.02.2024
இன்றைய தியானம்(Tamil) 27.02.2024
உபவாசம்
"பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள்;…" - யோவேல் 1:14
உபவாசம் கிறிஸ்தவ வாழ்விற்கு இன்றியமையாத ஒன்று. உபவாசம் மிகப்பெரிய தேவனை அசைக்கக் கூடிய ஒன்று. ஆனால் இன்று இது மறக்கப்பட்டு வருகிறது. அதன் பயனை அறியாமல் இருப்பதே இதற்குக் காரணம். அதின் பயனை சுருக்கமாக பார்ப்போமா?
தேவனின் இரக்கம் பெறலாம்:
நினிவே மக்களின் பாவத்தினால் தேவன் நினிவே ஜனங்களை அழிக்கப் போவதாக யோனா மூலம் கேட்டதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உபவாசித்து ஜெபித்தனர். (யோனா 3:5-8) தேவன் அதனைக் கண்டு மனஸ்தாபப்பட்டு நினிவேயை அழிக்காமல் இரக்கம் பாராட்டினார்.
எதிரிகள் முன் விருந்து கிடைக்கும்:
ஆமான் தன்னை வணங்காத மொர்தெகாயை மட்டுமல்லாமல் அவன் குலமான யூத குலம் முழுவதையும் அழிக்க திட்டம் தீட்டுகிறான். அவர்கள் உபவாசித்து மூன்று நாள் ஜெபிக்கின்றனர். அதன் பின்பு மொர்தெகாய் என்றோ செய்த நன்மை ராஜாவுக்கு தெரிய வருகிறது. மொர்தெகாயின் கனம் ஆமான் மூலமே செய்யப்பட ராஜ கட்டளை பிறந்தது. அது மட்டுமல்லாமல் காரியம் மாறுதலாகி யூத குலம் காக்கப்பட்டது.
சாத்தானை ஜெயிக்கலாம்:
இயேசு கிறிஸ்து பூமியில் உலாவிய நாட்களில் முதன் முதலில் ஊழியத்தை ஆரம்பிக்கும் முன் நாற்பது நாட்கள் உபவாசித்து ஜெபிக்கிறார். அப்போது அவரை எதிர்த்த சாத்தானை ஜெயமெடுக்கிறார். சீஷரிடம் சுகம் பெற வந்த ஒருவருக்கு சீஷர்களால் ஜெபித்து ஜெயம் பெற முடியாத போது "இந்த ஜாதி பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டு போகாது" என்றார். (மத்தேயு 17:21)
பாதுகாப்பு கிடைக்கும்:
நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து எடுத்து வந்திருந்த ஏராளமான பொன்னையும், வெள்ளியையும் சகலவித பணிமுட்டுகளையும் திரும்ப எருசலேம் தேவாலயத்திற்கு கொண்டு வரும்போது எதிரிகள் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பாக வர உபவாசித்து ஜெபித்தனர். நீண்ட தூரத்தில் பாதுகாக்கப்பட்டு பத்திரமாக எருசலேம் தேவாலயத்தில் சேர்த்தனர். அதாவது காரியத்தை ஜெயமாய் முடித்தனர்.
இதை வாசிக்கும் அன்பரே, நீங்கள் தேவனிடமிருந்து இரக்கத்தை பெற வேண்டுமா? அவமானப்பட்ட இடங்களில் வெற்றியையும், கனத்தையும் பெற வேண்டுமா? உபவாசித்து அவர் பாதத்தில் காத்திருங்கள். அவர் பெலன் தந்து உடனிருந்து நடத்துவார். உபவாசத்தினை ருசித்து பலனை அனுபவித்து பார்த்தால் உபவாசிக்காமல் இருக்க மாட்டீர்கள். இந்த ஆண்டு முயற்சித்து பாருங்களேன்! ஆசீர்வாதத்தையும், மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் காண்பீர்கள்.
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:
வட இந்திய மிஷனெரிகளின் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864