இன்றைய தியானம்(Tamil) 21.12.2024
இன்றைய தியானம்(Tamil) 21.12.2024
விசுவாசம்
"பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான்" - நீதிமொழிகள் 22:6
மேரி டீச்சர், தன் வகுப்பில் உள்ள மாணவரை ஒவ்வொருவராய் அழைத்து, உனக்குத் தெரிந்த பாட்டு, அல்லது கதை சொல்லுங்க, என்ற போது பிரின்ஸ் ஓடி வந்து, “என்னை மறவா இயேசு நாதா, உந்தன் தயவால் என்னை நடத்தும்” என்ற பாடலை நேர்த்தியாகப் பாடினான். மேரி டீச்சர் வியந்து போனார். யார் சொல்லி கொடுத்தாங்க? என்ற வினாவிற்கு எங்க பாட்டி என்று சொன்ன பிரின்ஸ் முகத்தில் ஒரே சந்தோஷம். தினமும் பாட்டி எனக்கு பாட்டும், பைபிள் கதையும் சொல்லிக் கொடுப்பாங்க என்று சொன்னான். பாட்டியின் முயற்சியால் தான் பிரின்ஸ் மனதில் அந்த பாடல் வரிகள் அழுத்தமாய் பதிந்து இருந்தது.
அந்த சிறிய வயதில் கர்த்தரைப் பாடி மகிழ்கிற இருதயத்தையும், கீழ்ப்படிதலையும் பிரின்ஸ் பெற்றிருந்தான் என்பது வியப்பாய் இருக்கிறதல்லவா! நான் மட்டும் கர்த்தரை அறிந்தால் போதாது; நம் சந்ததிகளும் நம்மை பின் தொடர வழிகாட்டும் பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. உபாகமம் 6: 6,7 ல் “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிற போதும், எழுந்திருக்கிற போதும் அவைகளைக் குறித்துப் பேசி”… என்று எழுதப்பட்டுள்ள கட்டளையை நாம் கடைபிடிக்கிறோமா? என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.
நம் வீட்டில் இருக்கிற சிறு பிள்ளைகளை கர்த்தருக்கு உகந்தவர்களாக வளர்ப்பதில் பெரும்பங்கு நமக்கு உண்டு. வேத வசனங்களை கற்றுக் கொடுக்கிற அன்பான பாட்டியா நீங்கள்? கர்த்தர் உங்கள் பேரில் நிச்சயமாய் மகிழ்ந்திருப்பார். வேதத்தில் தீமோத்தேயுவின் பாட்டி லோவிசாளுக்குள்ளும், அவர் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்த விசுவாசம் தீமோத்தேயுவுக்குள்ளும் நிலைத்திருக்கிறது என்று வாசிக்கிறோம். அப். பவுல், வாலிபன் தீமோத்தேயுவின் விசுவாசத்திற்கு காரணமான பாட்டியையும், தாயையும் கனப்படுத்துவதை 2தீமோ 1:4,5 ல் வாசிக்கலாம். ஆகவே சிறுபிள்ளைகளுக்கும் வேதவாசிப்பு, கர்த்தரைத் துதிப்பது, தவறாது ஜெபிக்கும் ஒழுங்கு ஆகியவற்றை வயது முதிர்ந்த பெரியோர் பயிற்றுவிக்க வேண்டும். அது மட்டுமன்றி அவர்களுக்கு நல்ல முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும்.
உங்கள் வீட்டு சிறு பிள்ளைகளுக்காக தினமும் ஜெபிக்கிறீர்களா? அவர்களை கர்த்தருக்குள் நிலைத்திருக்க பயிற்றுவிப்பீர்களா? அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க உங்களை தயார்படுத்துவீர்களா? சந்தேகமில்லை; உங்கள் வீட்டிலும் தீமோத்தேயுக்கள் எழும்புவார்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
- Mrs. எமீமா சௌந்தர்ராஜன்
ஜெபக்குறிப்பு:
நம் வளாகத்தில் நடைபெறும் கிறிஸ்மஸ் நற்செய்தி கூட்டத்தில் அநேகர் பங்கு பெற, இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864