Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  24-02-2021

இன்றைய தியானம்(Tamil)  24-02-2021

பூவோடு சேர்ந்த நாரும் .... 

“...ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக் கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிகத் திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள்.” – அப். 18:26 

நான் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தபோது, அப்போதைய இயற்பியல் ஆசிரியையைக் கண்டு ஆச்சரியப்பட்டதுண்டு. காரணம் அவர்கள் நேரத்தை கடைபிடிப்பது, கண்டிப்பான அன்புடன் பழகுவது, தெளிவாக பாடம் நடத்துவது, துணிச்சலான பேச்சு அனைத்தும் மாணவர்களாகிய எங்களை செதுக்கியது என்றுதான் கூற வேண்டும். அதிலும் காலை அசெம்பிளி நேரத்தில் அவரது பேச்சு வரும் நாளை, நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.  அவர் தனது கம்பீரமான குரலால் பரிசுத்த வேதாகமத்தில் நீதிமொழிகள் புஸ்தகத்திலிருந்து ஆலோசனைகளைக் கூறுவார். அது என்னை மட்டுமல்லாது, அநேக மாணவர்களையும் தொட்டது. அவரது வகுப்பு என்றாலே ஒரு தனிப்பிரியம் வந்துவிடும். அவருடன் பிரயாணம் பண்ணின அந்த ஒரு வருடத்தில் நானும், சக மாணவர்களும் அநேக ஒழுக்கங்களைக் கற்றுக் கொண்டோம். சிறப்பான வாழ்வு வாழ வேண்டும் என தீர்மானம் எடுத்தவர்கள் அநேகர்! 

பரிசுத்த வேதாகமத்தில் அப். 18ம் அதிகாரத்தில் தேவ ஊழியனாகிய பவுல் கொரிந்து பட்டணத்துக்கு வருகிறார். அங்கே இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த ஆக்கில்லாவையும் அவன் மனைவி பிரிஸ்கில்லாளையும் காண்கிறார். பவுல் அவர்களிடத்தில் தங்கி வேலை செய்து கொண்டு வந்தார். இவர்கள் சாதாரண கூடாரம் பண்ணுகிற தொழிலாளர்கள் அவ்வளவுதான். ஆனால் பாருங்கள் பவுல் அவர்களோடு தங்கியிருந்த நாட்கள் அவர்களுக்குப் பிரயோஜனமாயிருந்தது. பவுலின் வைராக்கியம், யூதருடனே செய்த சம்பாஷணைகள், பவுலின் தரிசனம், தேவனுக்காக அலைந்த அலைச்சல்கள் என எல்லாமே ஆக்கில்லாவையும், பிரிஸ்கில்லாளையும் வெகுவாய் தொட்டது. பவுல் அவர்களோடு இருந்த நாட்கள் அவர்களை புத்துணர்வு அடையச் செய்தது! அதுவரை சாதாரணமாய் இருந்த இந்த தம்பதியினர் பின்னர், அப்பொல்லோ என்ற வேதாகம வல்லுநருக்கே தேவனுடைய மார்க்கத்தை அதிகத் திட்டமாய் விவரித்துக் காண்பிக்கத் தகுதியானவர்களானார்கள். பவுலால் இத்தம்பதியினர் உருவாக்கப்பட்டனர். 

இதை வாசிக்கின்ற நண்பர்களே! நாம் தங்கியிருந்து படிக்கின்ற, வேலை செய்கின்ற, ஊழியம் செய்கின்ற இடத்தில் பவுலைப் போல அநேகரை உருவாக்கியிருக்கிறோமா? நம் வாழ்வு அவர்களுக்கு முன் மாதிரியாய் இருக்கிறதா? நம்முடன் ஐக்கியப்படும் நபர் பக்திவிருத்தி அடைந்திருக்கிறார்களா? அவர்களை இயேசுவின் சீஷர்களாக்கி இருக்கிறோமா? பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்று சொல்வார்கள், நம்மோடு இருப்பவர்கள் இப்படிப்பட்ட அனுபவத்தை பெற்றிருக்கிறார்களா? 
-    T. சங்கர்ராஜன் 

ஜெபக்குறிப்பு:
Media ஊழியத்தில் Audio Recording Mic அவசர தேவை சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)