Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  23-02-2021

இன்றைய தியானம்(Tamil)  23-02-2021

மறைக்க வேண்டாம் 

“...நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள்.” – அப். 5:9 

அப்போஸ்தலர்கள் தேவனுடைய வசனத்தை பிரசங்கித்தார்கள். வசனத்தை ஏற்றுக்கொண்டு விசுவாசிகளானவர்கள் திரளான கூட்டமாய் இருந்தார்கள். நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று அதன் தொகையைக் கொண்டுவந்து அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தார்கள். அவைகள் பொதுவாய் வைக்கப்பட்டு, அவரவருடைய தேவைக்குத் தக்கதாய் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

இச்சூழ்நிலையில் விசுவாசிகளான கணவன் மனைவியான அனனியாவும் சப்பீராளும் தங்களது நிலத்தை விற்று, அதில் ஒரு பங்கை வஞ்சித்து வைத்தார்கள். மீதியை அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தான் அனனியா. பேதுரு அவனிடத்தில், “பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பொய்சொல்லும்படி சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினது என்ன?” என்றார். அந்த இடத்திலேயே அனனியா விழுந்து ஜீவனை விட்டான். வாலிபர் அவனை அடக்கம் பண்ண எடுத்துச் சென்றனர். இதை அறியாமல் உள்ளே வந்த சப்பீராள், கணவனைப்போலவே பொருளாசையினிமித்தம் பொய்சொல்லி அதன் விளைவாக தன் ஜீவனையும் இழக்கிறாள். ஆம், பொய்சொல்வதற்கு இருவரும் ஒருமனப்பட்டதே இரண்டு உயிர் போவதற்கு காரணமாயிற்று. கணவனின் வஞ்சகத்தை அறிந்தவுடன் சப்பீராளாவது நல்ஆலோசனை கூறியிருக்கவேண்டும். அவளும் ஒத்துப்போனாள். இருப்பினும் மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. “நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள்” என்று பேதுரு சப்பீராளிடம் கேட்டபோதாவது சுதாரித்துக்கொண்டு உண்மையைக் கூறியிருக்கலாம்.... அந்தோ பரிதாபம்! 

“பண ஆசையே எல்லாத்தீமைக்கும் வேராயிருக்கிறது” என்ற வேதவசனம் இத்தம்பதியினரின் வாழ்வில் உண்மையானது. இவர்கள் நமக்கு கற்றுத்தரும் முக்கிய பாடம்: - தவறான காரியத்திற்கோ, வேதத்திற்கு புறம்பான காரியத்திற்கோ, குடும்பமாகவோ கணவன் – மனைவியாகவோ ஒருமனப்படக்கூடாது. யாராவது ஒருவர் நியாயத்தை எடுத்துச்சொல்ல வேண்டும். இல்லாத பட்சத்திலே பொய்யும், புரட்டும் தானாய் நுழைந்துவிடும்.

பிரியமானவர்களே! அனனியா-சப்பீராளின் வாழ்க்கை நமக்கொரு எச்சரிப்பாக அமையட்டும். கர்த்தருக்கடுத்த காரியங்களில் உண்மையாயிருப்போம். பிறருடைய வாழ்க்கைக்கு தீங்காய் முடியும் எந்த காரியத்தையும் செய்ய ஒருமனப்படவேண்டாம். பணத்தால் குடும்பங்களில் பெரும்பிரச்சனைகளை கையாளுவதில் வெகு கவனமாயிருப்போம். கர்த்தருக்குக் கொடுக்கும் காரியத்தில் உண்மையாயிருந்து பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம். 
-    Mrs. புவனா தனபாலன்

ஜெபக்குறிப்பு:
இராக்லாந்து வேதாகம கல்லூரியில் இந்தியாவின் பல பாகங்களிலிருந்து வந்து இணைய ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)