இன்றைய தியானம்(Tamil) 23-11-2022
இன்றைய தியானம்(Tamil) 23-11-2022
வேதமே வெளிச்சம்
“உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” – சங்கீதம் 119:105
பாபு என்ற வாலிபன் திடீரென விபத்தில் கண்பார்வையை இழந்தான். தன்னைச் சுற்றி இருள் சூழ்ந்திருப்பதால் எப்போதும் அலறிக்கொண்டும், கையில் கிடைப்பதை எறிந்து கொண்டும் இருந்தான். ஒரு நாள் அங்கு சுவிசேஷம் சொல்ல வந்தவர் அவனிடம் அன்பாகவும் கரிசனையாகவும் நடந்துகொண்டார். அவரிடம் பாபு சாந்தமாக இருப்பதைக் கண்டு தினமும் அவரை வரும்படி கோரினர் பாபுவின் பெற்றோர். பாபு ஒரு வாரத்தில் தன் நிலையை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தான். பாபுவின் பெற்றோர் அவரிடம் “உங்களால் பாபுவை எப்படி ஒரே வாரத்தில் மாற்ற முடிந்தது?” என்று கேட்டனர். அப்போது அவர் “நானும் கண்பார்வை குன்றியவன்தான். இயேசுவின் வார்த்தைகள் எனக்கு வெளிச்சமாயிருந்து வழிகாட்டின, என் காயங்களை ஆற்றின. பாபுவும் இப்போது அந்த வார்த்தையாகிய வெளிச்சத்தைக் கண்டுகொண்டான். ஆதலால் சந்தோஷமாயிருக்கிறான்” என்றார்.
இன்றைய பிஸியான வாழ்க்கையில் வேதத்தை வீட்டு அலமாரியிலும், செல்போனிலும் வைத்துக் கொண்டு வாசிக்க நேரமில்லை என்று அலைகிறோம். எனவே ஒரு சிறு இக்கட்டான, நெருக்கடியான சூழ்நிலை வந்ததும் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் கலங்குகிறோம்.“வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை’’ என்றும், அது நிறைவேறுமளவும், ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் சிறு உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத்.5:18) என்று இயேசுகிறிஸ்து சொல்லிய வார்த்தைகள் தெரிந்தும் நாம் அதை வாசிப்பதில்லை, வாசித்தாலும் தியானிப்பதில்லை. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும், அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். ஏனெனில், நம்முடைய எல்லாக் கேள்விகளுக்கான பதிலும், செல்ல வேண்டிய பாதைக்கான வெளிச்சமும் வேதத்திலிருந்து கிடைக்கிறது. அதனால் வேதத்தில் பிரியமாயிருக்கிறவர்கள் வாழ்வில் சறுக்கல்கள், தடைகள் வந்தாலும் இரட்சிப்பை காத்துக் கொண்டவர்களாக முன்னேறிச்செல்வர்.
இதை வாசிக்கும் அன்பரே, நமக்கு வழிகாட்ட Google map மற்றும் எத்தனையோ வழிகாட்டிகள் இருந்தாலும், வாழ்வில் கிறிஸ்துவை நோக்கிய ஓட்டத்தில் சரியான வழிகாட்டி வேத வசனங்களே. செய்வதறியாது நாம் இருக்கக் கூடிய சூழலிலும் நமக்கு வெளிச்சமாயிருந்து வழிகாட்டி, வாழ்வதற்கான நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் வசனங்கள் தரும். வேத வசனங்கள் நம் கைகளில் அல்ல நம் இருதயத்தில் இருக்கட்டும். நம் வாழ்க்கை ஒளி வீசட்டும்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
எழுப்புதல் விரும்புவோர் முகாமில் பங்குபெற்றவர்கள் கர்த்தருக்கென்று ஏதாகிலும் செய்கிறவர்களாக மாற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250