Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  21-01-2021

இன்றைய தியானம்(Tamil)  21-01-2021

மோசேயின் கோல்

“கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்....” – யாத். 4:2 

கர்த்தர் மோசேயின் வாழ்க்கையில் குறுக்கிடும் போது ஒரு ஆச்சரியமான கேள்வியோடு குறுக்கிட்டார். உன் கையிலிருக்கிறது என்ன? என்று கேட்டார். 

இதே கேள்வியை ஒரு நபரைப் பார்த்து ஆண்டவர் கேட்டார். அதற்கு அவர், “என்னிடம் இருப்பது ஒரு பேனாதான், அதிலே கல்வாரி சிலுவையில் எனக்காய் சிந்தின அந்த இரத்தத்தை நிரப்பித் தாரும். அது உம்முடைய மகிமையை, காருண்யங்களை எழுதட்டும். உம்முடைய மனதுருக்கத்தை எழுதட்டும்” என்று சொன்னார். அவரைக் கொண்டு தேவன் நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதுவதற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாகவும் அதை பயன்படுத்துகிறார். இன்று அவர் இல்லை ஆனாலும் அவர் எழுதின புத்தகங்கள் ஒவ்வொருவரையும் உயிர்ப்பித்து, உற்சாகப்படுத்தி, வாழ்வில் உயர்த்துவதாகவே இருக்கிறது. அவர் யார் தெரியுமா? அன்றன்றுள்ள அப்பம் ஊழியத்தின் ஸ்தாபகர். மதிப்பிற்குரிய ஐயா. சாம் ஜெபத்துரை அவர்கள்தான். 

பார்வோன் அரண்மனையிலே உயர்ந்த நிலைமையிலிருந்த மோசேயின் கையிலே இப்போது எல்லா மேய்ப்பர்களிடமும் இருக்கக் கூடிய சாதாரண கோல்தான் இருந்தது. ஆண்டவர் அதைக் குறித்துத்தான் கேள்வி எழுப்பினார். ஆண்டவருக்குத் தெரியாதா மோசேயினுடைய கையில் என்ன இருக்கிறது என்று! அப்படித்தான் ஒரு நாள் கர்த்தர், “ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டார். ஆதாம் மரத்திற்கு பின்னால் ஒளிந்திருப்பது கர்த்தருக்கு தெரியாதா என்ன? கர்த்தர் கேள்விகளைக் கேட்கும் போதெல்லாம் நம்மை சிந்திக்கும்படி தூண்டி எழுப்புகிறார் என்பதை புரிந்து கொள்கிறோம். 

மோசேயினுடைய கையில் கோல் இருந்தது, தாவீதின் கைகளில் கவணும் கற்களும் இருந்தன, கிதியோனின் கைகளில் பானையும் எக்காளமும் இருந்தது. சிம்சோனின் கைகளில் கழுதை தாடையின் எலும்புகள் இருந்தன. இயேசுவின் பிரசங்கத்தைக் கேட்க வந்த சிறுவனின் கைகளில் 5 அப்பமும் 2 மீன்களும் இருந்தன. ஏழை விதவையின் கைகளில் இரண்டு காசுகள் இருந்தன, அவர்கள் கைகளிலிருந்தது சிறிய காரியம் என்றாலும் கர்த்தருக்கென்று அர்ப்பணித்தபோது கர்த்தர் அதைக் கொண்டு பலத்த அற்புதங்களைச் செய்தார். ஒரு வேளை உன்னிடத்தில் நல்ல பாட்டு பாடும் திறன் இருக்கலாம், எழுதும் திறன் இருக்கலாம், பேசும் திறன் இருக்கலாம், மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நல்ல மனதிருக்கலாம், உண்மையாய் கடினமாக உழைக்கும் திறன் இருக்கலாம். எவற்றை நீங்கள் ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கிறீர்களோ அதை ஆண்டவர் ஆசீர்வதித்து பல ஆயிரங்களுக்கும் இலட்சங்களுக்கும் பயன்படுத்துவார். உங்கள் கையிலிருப்பதை அவருக்கு கொடுத்தாலே போதும்!
-    S.P. சந்தனபாண்டி

ஜெபக்குறிப்பு:
ஆந்திரா பணித்தளத்தில் ரேகா புண்ணியகிரி மலை கிராமத்தில் கட்டப்படும் ஆலயம் விரைவில் கட்டப்பட ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)