Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  30-12-2020

இன்றைய தியானம்(Tamil)  30-12-2020

கணக்கொப்புவித்தல் 

“...எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.” – மத்தேயு 25:19 

ஒவ்வொரு நிறுவனமும் மார்ச் மாத இறுதியில் தங்கள் நிறுவனக் கணக்கு வழக்குகளை அரசாங்கத்திற்கு ஒப்புவிக்க கடமைப்பட்டுள்ளது. உலகப்பிரகாரமான ஒரு நிறுவனமே தாங்கள் செலவழிக்கும் சிறிய தொகையோ, பெரிய தொகையோ ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு பதிவிட்டு அதை சரியானபடி கணக்கு காண்பிக்க வேண்டியுள்ளது. நம்முடைய பரலோக எஜமானும் நம்மிடத்தில் ஒப்புவித்த காரியங்களுக்கு நியாயத்தீர்ப்பு நாளில் கணக்கு கேட்பார் என்பதை மறக்கக்கூடாது. நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய சில காரியங்களைக் காண்போமா? 

தன்னைக் குறித்து:   ரோமர் 14:12ல் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான் என்று எழுதப்பட்டுள்ளபடி நாம் வாழும் வாழ்க்கையைக் குறித்து நாமே தேவனுக்கு முன்பாக கணக்கொப்புவிக்க வேண்டும். நம்முடைய சாட்சி பிறரை கிறிஸ்துவண்டை வழிநடத்த ஏதுவாக அமைகிறதா? அல்லது சாட்சியில்லாத வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களை இடறப்பண்ணுகிறோமா? கிறிஸ்துவை உடையவர்கள் தான் கிறிஸ்தவர்கள். நான் கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவனாக வாழ்கிறேனா? அல்லது என்னைக் காண்கிறவர்கள் கிறிஸ்துவைக் காண்கிறார்களா? உங்களுடைய வாழ்க்கை முன் மாதிரியான வாழ்க்கையாக, மற்றவர்களை ஆதாயப்படுத்துகிற வாழ்க்கையாக இருக்கிறதா சிந்திப்போம்.

நான் பேசும் வார்த்தையைக் குறித்து:   ஆண்டவராகிய இயேசு மத்தேயு 12:36ல் மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் தேவையான வார்த்தைகள் தானா? அல்லது வீணான வார்த்தைகளா? பவுல் அப்போஸ்தலனும் கேட்பவர்களுக்கு பக்தி விருத்திக்கு ஏதுவான வார்த்தையும், பயனுள்ள வார்த்தைகளையும் பேசும்படி ஆலோசனை சொல்லுகிறார். 

தாலந்துகளை குறித்து:  லூக்கா 16:2ல் “உன் உக்கிராணக் கணக்கையொப்புவி...” என்று எழுதியுள்ள வேத வார்த்தையின்படி இவ்வுலகில் ஆண்டவரிடம் நாம் பெற்ற தாலந்துகளை அவருக்காக, அவர் நாம மகிமைக்காக பயன்படுத்த வேண்டும். எனக்கு ஒரு தாலந்து கூட இல்லை என்று ஒருவரும் சொல்ல முடியாது. நம் ஒவ்வொருவருக்கும் தேவன் தாலந்துகளையும் திறமைகளையும் தந்துள்ளார். நேரம், பணம், திறமைகள் இவைகள் எல்லாம் தேவன் நமக்குத் தந்தது. தேவன் தந்ததை அவர் நாம மகிமைக்காக பயன்படுத்த வேண்டியது நமது கடமை. 

நண்பர்களே! தேவனுக்கு முன்பாக கணக்கொப்புவிக்கும் நாளை நாம் நெருங்கி கொண்டிருக்கிறோம். ஆகவே ஆயத்தமாவோம். 
-    R. ஜெயசீலா 

ஜெபக்குறிப்பு:
புதிய ஆண்டு ஆசீர்வாதமான ஆண்டாக அமைய ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)