இன்றைய தியானம்(Tamil) 12.03.2025
இன்றைய தியானம்(Tamil) 12.03.2025
நாயின் குணம்
"...உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக் கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்” - 2 பேதுரு 2:20
திருமறையைப் பொறுத்தவரை நாய் அசுத்தமான விலங்காக பார்க்கப்படுகிறது. பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; என்று மத்தேயு 7:6 ல் வாசிக்கிறோம். கானானியர்களை யூதர்கள் நாயைப் போன்றே மதித்தனர். யூத மக்களின் பழக்கவழக்கத்தின்படி, பண்பாட்டின்படி, நாய்கள் மதிப்பற்றவைகளும் நாயின் கிரயம் அருவருப்பானதாகவும் பார்க்கப்பட்டது. மேலும் பின்மாற்றம் அடைந்து பழைய பாவத்திற்கு திரும்புகிறவர்களை, நாய் தான் கக்கினதை தின்னுவது போல என்று பேதுரு உருவகப்படுத்துகிறார்.
வேதத்திலே நாயைப் போல தான் கக்கினதை தின்ற மக்கள் உண்டு. உலக ஆசையை வெறுத்து உன்னத பணியாம் ஊழியத்தைத் தெரிந்து கொண்ட தேமா, அப்போஸ்தலனாகிய பவுலோடு ஊழியத்திற்குச் சென்றார். ஆனால் இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து, பவுலை விட்டு பிரிந்து உலகத்தோடு போய்விட்டார். பெரிய அப்போஸ்தலனாகிய பவுலோடு இணைந்து ஊழியம் செய்தவர் தான், ஆனாலும் அவரையும் பின்மாற்றம் இழுத்து விட்டது. இதன் மூலம் வேதம் நம்மை எச்சரிக்கும் காரியம், உலகத்தின் அசுத்தங்களுக்கு தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்குண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின் நிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாய் இருக்கும். ஆம், இது நாய் தான் கக்கினதை மீண்டும் தின்னுவது போன்றது என பேதுரு மிகக் கடுமையாக சாடுகிறார். கலப்பையில் கை வைத்த நாம் பின்னிட்டு பார்க்கிறோமா என்று நம்மை நாமே நிதானித்து சரி செய்து கொள்வோம்.
அடுத்ததாக, நாய்க்கு இயற்கையாக பல குணங்கள் இருந்தாலும், ஒரு மனிதன் மூலம் அதனுடைய சுபாவம் மாற்றமடைந்து, வீட்டில் பற்பல வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. தனது மோப்ப சக்தியால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், எஜமானுடைய உடைமைகளை பாதுகாக்கவும், அவர் சொல்லுக்கு கீழ்ப்படியவும் செய்கிறது. ஐந்தறிவுள்ள ஒரு மிருகமே சாதாரண மனிதனால் தன்னை மாற்றிக் கொள்ள முடியும் என்றால், இயேசு கிறிஸ்துவினால் நம்முடைய குணநலன்கள் மாற்றப்படுவது எத்தனை நிச்சயம்? ஒருவரும் கெட்டுப் போவது தேவனுக்கு சித்தம் அல்ல. எந்த மனுஷனையும் அவரால் பிரகாசிப்பிக்கச் செய்ய முடியும். எல்லா தரப்பட்ட மக்களும் எஜமானாகிய இயேசுவுக்கு சொந்தமாக முடியும். ஆம், இயேசுவின் பாடு, மரணம், இரத்தம் சிந்துதல், அடக்கம் பண்ணப்படுதல், உயிர்த்தெழுதல், பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுதல் மனிதர்களை வேறு பிரித்தவர்களாக, புதிய மனிதர்களாக இயேசுவின் பின் சந்ததியாக உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நாம் மறுபடியும் பிறந்தவர்களாக மாற வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாக உள்ளது. நிக்கொதேமுவிடம் இயேசு அழைப்பு கொடுத்தது போல மறுபடியும் பிறக்க ஒவ்வொருவருக்கும் அழைப்பு கொடுக்கிறார். நம்முடைய பழைய பாவ சுபாவங்கள் மாறி புதிய மனிதனாக கிறிஸ்துவின் சாயலை நாம் வெளிப்படுத்த முடியும். அல்லேலூயா!
- Bro. சாமுவேல் மோரீஸ்
ஜெபக்குறிப்பு:-
ஒவ்வொரு தாலுகாவிலும் 24 மணி நேர சங்கிலி தொடர் ஜெபம் செய்யப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864