இன்றைய தியானம்(Tamil) 08.03.2025
இன்றைய தியானம்(Tamil) 08.03.2025
என் பிரியமே! நீ ரூபவதி
“என் பிரியமே! நீ ரூபவதி: நீ ரூபவதி: உன் கண்கள் புறாக்கண்கள்” - உன்னதப்பாட்டு 1:15
கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதரிகளே! உங்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பெயராலே மகளிர் தின நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெருக ஆண்டவர் கிருபை செய்வாராக. உன்னதப்பாட்டு 2 : 14 லே மணவாளன் மணவாட்டியிடம், “கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முக ரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது” என்றார்.
அருமையான ஆண்டவருடைய பிள்ளையே, இன்று உன்னைக் குறித்து ஆண்டவர் இப்படித்தான் கூறுகிறார். நம்மை புறாவைப் போல் காண்கிறார். உயர்வான இடங்களிலும் நீர் ஆதாரம் உள்ள இடங்களிலும் புறாக்கள் தங்குகின்றன. நாமும் கூட, நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் இருப்பதை உணர்ந்து, ஜீவத்தண்ணீராகிய இயேசுவின் அருகிலே அவருடைய சமுகத்தை எப்பொழுதும் தரிசிப்பவர்களாக இருக்க ஆண்டவர் எதிர்பார்க்கிறார். உலகம் ப்படி பார்த்தாலும் ஆண்டவர் நம்மை உயர்ந்த இடத்தில் தான். நேசத்துக்கு நம்மை எப்படி உரியவர்களாக தான் பார்க்கிறார். “என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை.” என்று கூறுகிறார். உலகத்தில் நம்மை குறை சொல்ல அநேகர் உண்டு. பெற்றோர், பிள்ளைகளை குறை கூறுகின்றனர். பிள்ளைகள், பெற்றோரை குறை கூறுகின்றனர். உடன்பிறந்தோர், நண்பர்கள் மத்தியில் கூட ஒருவரை ஒருவர் குறையாக எண்ணிக் கொண்டு மனத்தாங்கலோடு கடமைக்காக பேசும் நிலை உள்ளது. தவறான கண்ணோட்டத்தோடு நம்மை மட்டம் தட்டும் உறவினர் கூட்டமும் உண்டு. ஆனால், ஆண்டவர் நம்மை பழுதற்றவர்களாகவேப் பார்க்கிறார். ஏனெனில் அவர் தாமே மணவாட்டியான நமக்காக தம்மைத்தாமே பழுதற்ற பலியாக ஒப்புக்கொடுத்தார்.
உலகம் நம்மை பார்ப்பதை வைத்துக் கொண்டு, உங்களை நீங்களே தாழ்வாக நினைக்கிறீர்களா ? வேண்டாம் சகோதரி. நீங்கள் ஆண்டவருடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள், அழகானவர்கள், பழுதற்றவர்கள். உங்களால் எப்பொழுதும் எந்த வயதிலும் ஆண்டவருக்காக பணி செய்ய முடியும் பிரகாசிக்க முடியும். நாகமானின் சிறு வேலைக்கார பெண், வாலிபப் பிள்ளையான மரியாள், வயது முதிர்ந்த மோசேயின் சகோதரி மிரியாம் என எத்தனையோ பேர் ஆண்டவருக்காக எழுந்து பிரகாசித்துள்ளனர். வயது ஆண்டவருக்கு தடையில்லை. வாழ்வியல் சூழல் ஆண்டவருக்கு பணி செய்ய ஒரு தடையே இல்லை. புதிய உற்சாகத்தோடு ஆண்டவரின் பணி செய்ய ஆண்டவர் உங்களை அழைக்கிறார். உங்களுக்காக காத்திருக்கிறார்.
- Rev. எலிசபெத்
ஜெபக்குறிப்பு:
1000 மிஷனெரிகளை தாங்கும் 1000 வீட்டு ஜெபகுழுக்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864