Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 06.03.2025

இன்றைய தியானம்(Tamil) 06.03.2025

 

உதவிக்கரம் நீட்டும்

 

"நன்மை செய்யும்படி உனக்கு திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே" - நீதிமொழிகள் 3:27

 

ஒரு முதியவர் bus stand அருகே ஒரு சிறிய கூடாரத்தில் செருப்பு தைக்கும் வேலையைச் செய்து வந்தார். அவரின் நீண்ட நாள் ஆசை என்னவென்றால், இயேசு கிறிஸ்துவை நேரில் காண வேண்டும். அவருக்கு தன் கையால் செய்த ஒரு செருப்பைக் கொடுக்க வேண்டும். எனவே அதற்கான பணத்தை சேமித்து, அழகான தரமான தோலை வாங்கி, மிக நேர்த்தியாய் ஒரு ஜோடி செருப்பை செய்தார். இயேசுவின் வருகையை எதிர்பார்த்து அதற்காக ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். நாட்களும், மாதங்களும் கடந்து சென்றன. ஒரு நாள் ஒரு வயதானவர் கடுமையான வெயிலில் காலில் புண்களோடு செருப்பில்லாமல் தள்ளாடி நடந்து வருவதை பார்த்த அந்த முதியவர், அவருக்கு ஒரு செருப்பை கொடுத்து விடுவோம் என்று எண்ணி கூடாரத்திற்குள் சென்றார். றார். ஆனால் இயேசு கிறிஸ்துவுக்காக செய்த செருப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை. உடனே இயேசுவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, அந்த வயதானவரிடம் அந்த விலையுயர்ந்த செருப்பை கொடுத்து விட்டார். அவரும் அதை காலில் போட்டுக் கொண்டு நன்றி சொல்லிவிட்டு போய்விட்டார்.

 

அவருக்கோ, இயேசு கிறிஸ்துவுக்காக இன்னொன்று செய்ய வேண்டுமென்று ஓய்வின்றி செருப்பை பழுது பார்த்த பணத்தை சேகரிக்கத் துவங்கினார். ஒருநாள் அவரது கனவில், வெண்ணாடை தரித்த ஒருவர் தன்னுடைய கடைக்கு வருகிறார். இவர் இயேசு கிறிஸ்து என அறிந்தவுடன் அவருக்கு கொடுக்க செருப்பு இல்லையே என்று நினைத்து அழுதார். இயேசு கிறிஸ்து அவரை அரவணைத்துக் கொண்டு, “என் மகனே, என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீ எதைச் செய்தாயோ, அதை எனக்கே செய்தாய்” என்றார். உடனே அந்த முதியவர் மிகவும் சந்தோஷப்பட்டார்.

 

மத்தேயு 25:31 ல் இயேசுவானவர் மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் போது அவர் தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, வாருங்கள் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், போஜனம் கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், தாகத்தைத் தீர்த்தீர்கள், வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார். நீதிமான்கள் எப்பொழுது இவற்றைச் செய்தோம் என்றதற்கு, மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்பார். ஆம், நன்மை செய்ய நமக்கு திராணியிருக்கும்போது, அதற்கான சூழ்நிலைகள் வாய்க்கின்ற பொழுது, நம்மால் இயன்றவரை பிறருக்கு உதவி செய்வோம். இம்மையிலும், மறுமையிலும் அதற்குரிய பலனைக் காண்போம்.

- Bro. குமார்

 

ஜெபக்குறிப்பு:

Day care Centre பயிலும் மாணவர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)