Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 05.03.2025

இன்றைய தியானம்(Tamil) 05.03.2025

 

வழக்கம் போல…

 

"தானியேலோவென்றால்,... தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்" - தானியேல் 6:10

 

கல்லூரி விடுமுறையில் ரீட்டா தன் உறவின் முறையான ஸ்டெல்லா ஆன்ட்டி வீட்டிற்கு வந்து ஒரு மாதகாலம் தங்கியிருந்தாள். விடுமுறை முடிந்து ஊருக்கு கிளம்பி பயணித்துக் கொண்டிருக்கையில், ஒரு காட்சி அவள் கண் முன் மீண்டும் மீண்டும் தோன்றியது. ஸ்டெல்லா ஆன்ட்டி வீட்டில் மாலை ஏழு மணிக்கு மிகச்சரியாக ஆன்ட்டியும், விக்டர் uncle ம், சித்தியும் அவரவர் தங்கள் கைகளில் வேத புத்தகம், பாட்டு புத்தகத்துடன் ஹாலுக்கு வருவதும், மூவரும் சேர்ந்து பாடல் பாடி, uncle வேதபகுதி வாசித்து விளக்குவதும், மூவரும் நேர் முழங்காலில் நின்று ஜெபிப்பதும் மாறாது. ரீட்டாவும் இணைந்து கொள்வாள். ஜெபத்தில் சுயநலம் இருக்காது. தேசம், மாநிலம், ஆட்சியாளர், சிறுமைப்பட்டோர், ஊழியர்கள், ஊழியங்கள், உறவுகள், குடும்பம் என உற்சாகமாய் மாறி மாறி ஜெபிப்பார்கள். இந்த ஒழுங்கு ரீட்டாவுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. ஒரு தீர்மானத்துடன் தான் புறப்பட்டாள்.

        

வருடங்கள் உருண்டோட ரீட்டா திருமணம் முடிந்து, தன் கணவருடனும், குழந்தையுடனும் மீண்டும் ஆன்ட்டி, uncle , சித்தியைப் பார்க்க வந்தாள். ரீட்டாவுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவள் எதிர்பார்த்திருந்த அந்த மாலை ஏழு மணி ஆனதும், முதுமை நிலையிலும் மூவரும், வேத புத்தகத்தோடு அவரவர் அறையினின்று வெளியே வந்தனர். மெய்சிலிர்த்தது, கண்களில் நீர் துளிர்த்தது. ஆம், எதுவும் மாறவில்லை. தங்கள் ஜெப நேரத்தை முன் செய்து வந்தபடியே பின்பற்றின அவர்களுடன் ரீட்டா, தானும் அதைக் கடைப்பிடித்து வருவதை பகிர்ந்து கொண்ட போது அவர்கள் பூரித்துப் போனார்கள். தானியேல் பாபிலோனிலும் முன் செய்து வந்தபடியே தினமும் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்கால் படியிட்டு ஜெபம் பண்ணினார். அவரது கிரமமான, ஜெபவாழ்வே அநேகர் இஸ்ரவேலின் தேவனை அறிந்து கொள்ள காரணமாயிற்று. தானியேலைப் போல முன் செய்து வந்தபடியே இந்த முதியவர்கள் தங்கள் ஜெப நேரத்தை, கடைப்பிடித்தது எத்தனை சிறப்பு!  

 

ஆம், நம்முடைய வாழ்க்கை முறை ஒரு பக்தியுள்ள சந்ததியை உருவாக்கும்படி, மாதிரியாய் இருக்க வேண்டும். தீத்து 2:7 ன் படி, "நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து," என்று பவுல் கூறும் ஆலோசனையை நினைவில் கொள்வோம். நம்முடைய ஜெப வாழ்வு, அன்றாட வாழ்க்கை முறை பிறருக்கு முன்மாதிரியாக அமையட்டும்.

- Mrs. எமீமா சௌந்தர்ராஜன்

 

ஜெபக்குறிப்பு:

நம் பணித்தளங்களில் தேவையுள்ள நபர்களுக்கு ஒரு லட்சம் வேதாகமம் கொடுக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)