இன்றைய தியானம்(Tamil) 24.02.2025
இன்றைய தியானம்(Tamil) 24.02.2025
சிங்கம்
"...யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர்... ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்" - வெளி. 5:5
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பரிசுத்த வேதாகமம் சிங்கத்துக்கு ஒப்பிட்டு உவமையாக கூறுகிறது. அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் அவருடைய பிள்ளைகள் அதாவது சிங்க குட்டிகள்! சிங்கத்திடம் காணப்படும் குணாதிசயங்கள் அவருடைய பிள்ளைகளாகிய நம்மிடம் காணப்படுகின்றதா என்பதை சிறிது நேரம் தியானிப்போம்.
தைரியமுள்ளது (நீதி. 28:1): சிங்கம் கெர்ச்சிக்கும் போது காட்டிலுள்ள விலங்குகளுக்குள்ளாக பயம் உண்டாகும். அதுபோல நீதிமான்களுக்குள்ளாக தைரியம் உண்டாயிருக்கும். நம்மிலுள்ள சில பாவங்கள், அவிசுவாசம் போன்றவை தைரியத்தை இழக்கச் செய்து அக்கினியும், கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவதற்கு ஏதுவாக்குகிறது. ஆதாம் பாவம் செய்தபோது தைரியத்தை இழந்து பயந்து கர்த்தரிடத்திலிருந்து தன்னை ஒளித்துக் கொள்கிறான். ஆம், நாம் கர்த்தருக்கும், மனிதருக்கும் முன்பாக நீதியுள்ள வாழ்க்கை வாழ்ந்தால் சிங்கத்தைப் போல தைரியமாக இருக்க முடியும்.
பின்னிடையாதது (நீதி 30:30) : சிங்கம் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தான் முன் வைத்த காலை பின்னிட்டு வைக்காது. இயேசு கூறுகிறார், "கலப்பையின் மேல் தன் கையை வைத்து பின்னிட்டு பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்கு தகுதியுள்ளவன் அல்ல" என்று! இன்றைய நாட்களில், உலக கலாச்சாரங்கள், மூடநம்பிக்கைகள், பாரம்பரியங்களால் சிக்கி இரட்சிக்கப்பட்ட அநேகர் பின்மாற்ற நிலையில் வாழ்வதை காண முடிகின்றது. பின்வாங்கிப்போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்று எபிரெயர் 10: 38ல் வாசிக்கின்றோம். பாடுகள், உபத்திரவங்களால் நாம் பின்வாங்கிப் போகிறவர்களாய் வாழ்ந்துவிடக்கூடாது.
ஆகாரக் குறைவு இருக்காது ( நாகூம் 2:12): சிங்கத்தின் கெபியில் எப்போதும் ஆகாரத் திரட்சி உண்டாயிருக்கும்.(சங்கீதம் 34:10). ஒரு வேளை சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாய் இருந்தாலும் கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது என்று பார்க்கிறோம். எல்லாவற்றைப் பார்க்கிலும் வேதவசனமாகிய ஆகாரத்தை நமது உள்ளத்தில், இருதயமாகிய பலகையில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிரியமானவர்களே! நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாய் விழித்திருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். ஏனென்றால் நமது எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோவென்று வகை தேடி சுற்றித் திரிகிறான். இயேசுவைப்போல ஜெயங்கொள்ளுகிறவர்களாய் வாழ்வோம். தேவன் தாமே இதற்கேற்ற கிருபைகளை நமக்குத் தந்தருள்வாராக! ஆமென்.
- Mrs. ஜெபக்கனி சேகர்
ஜெபக்குறிப்பு:
கைப்பிரதி ஊழியங்கள் மூலம் கைப்பிரதியைப் பெற்றவர்கள் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864