இன்றைய தியானம்(Tamil) 23.02.2025
இன்றைய தியானம்(Tamil) 23.02.2025
மாவு சோதனை
"திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்" - சங்கீதம் 119:14
ஹலோ குட்டிஸ்! இன்னைக்கு நான் உங்களுக்கு ஒரு உண்மையா நடந்த சம்பவத்தை சொல்லப் போறேன். கேட்க ரெடியா?ஆப்பிரிக்கா தேசத்துல கிறிஸ்தவ மிஷனெரிகள் ஊழியம் செஞ்ச நாட்களில், சில ஆதிவாசிகள் இயேசப்பாவ ஏற்றுக் கொண்டாங்க. அதுல சூமா என்ற சிறு பெண் இயேசுவுக்கு சாட்சியாக வாழ ஆரம்பிச்சா. ஒருநாள் மிஷனெரி அம்மா, சூமா கிட்ட முட்டைகளை வாங்கிட்டு வர சொன்னாங்க. இவளும் ஒரு விவசாயி வீட்டுக்கு போனா. வீட்ல ஆள் இல்லாததுனால சந்தைக்கு போயி முட்டைய வாங்கிட்டு, அங்க அவளுக்கு பிடிச்ச ஒரு டிரஸ்ஸையும் எடுத்துட்டு வந்தா. அன்றைக்கு அந்த விவசாயியோட ஆடு காணாம போச்சி என்று ஊரெல்லாம் பேச்சு. பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னாங்க, சூமா தான் வீட்டுக்கு வந்தா, அவ தான் ஆட திருடி இருக்கணும். ஆட சந்தையில வித்துட்டு, அந்த காசுல டிரஸ் எடுத்துருக்கா அப்படின்னு வீணான பழியை போட்டாங்க.
மறுநாள் சூமாவை ஊர் தலைவர் கிட்ட கூட்டிட்டு வந்தாங்க. அவள் நடந்த உண்மையை எல்லாம் சொன்னா. "உன்னை உன் அப்பா ஞாயிறு பள்ளிக்கு அனுப்பினதே தப்பு" என்று தலைவர் சொன்னார். அந்த ஊர் வழக்கப்படி தப்பு செஞ்சவங்களுக்கு காய்ந்து போன மாவை எடுத்து, வாயை விரிவா திறந்து, நாவையோ தாடையையோ அசைக்க முடியாதபடி வாய்க்குள்ள மாவை திணிச்சி, குறிப்பிட்ட நேரத்துக்குள்ள அதை விழுங்க வேண்டும். விழுங்காட்டா அவங்க தான் தப்பு செஞ்சவங்க. இதுதான் சோதனை! அதை மெல்லவே முடியாது, எச்சிலும் ஊறாது. சூமா மனதுக்குள்ள ஒரு பிரேயர் பண்ணினாள். "இயேசப்பா உங்க நாமம் மகிமைப்பட, நான் குற்றம் செய்யலங்கிறதை வெளிப்படுத்த எனக்கு உதவி செய்யும்" என்று. கொஞ்ச நேரத்துல வாயில் ஈரம் கசிந்தது. பசை உண்டானது. மாவை முற்றிலும் விழுங்கி வாயைத் திறந்து காண்பித்தாள். அந்த விவசாயி அதை நம்பல. ஏதோ தந்திரம் செஞ்சுட்டா அப்படின்னு சொன்னாரு. அதே நேரத்தில் முரடன் ஒருவன் அங்கு வந்தான். அவன் கையில ஒரு ஆடு இருந்துச்சு. அந்த விவசாயிடம் "இது உன் ஆடா" என்றான். இந்த ஆடு என் தோட்டத்துப் பயிரை நாசமாக்கிடுச்சு. நஷ்ட ஈடு தா என்றான். விவசாயி, வெட்கத்துடன் நஷ்ட ஈடு கொடுக்க சம்மதித்தான். சூமா, தான் கிறிஸ்தவளான பின் பொய் சொன்னதே இல்லை என்றாள். இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது.
குட்டி பிள்ளைகளே! சூமாவை திருட்டுப் பட்டத்திலிருந்து தப்புவித்த தேவன், நீங்களும் உண்மையா ஜெபிச்சா எல்லா இக்கட்டிலிருந்தும் உங்களை தப்புவிப்பாங்க.
- Mrs. சுதா பாஸ்கர்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864