இன்றைய தியானம்(Tamil) 22.02.2025
இன்றைய தியானம்(Tamil) 22.02.2025
பன்றி
"பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்" - கொலோசெயர் 3:2
பன்றி ஒரு அசுத்தமான பிராணி. அது அசைபோடாது. சுத்தமானதும், அசுத்தமானதுமான எல்லாவற்றையும் அது போகும் வழியிலேயே தின்னும். குடியாகிய பாவத்தையும், பெருந்தீனியாகிய பாவத்தையும் இது காட்டுகிறது. பன்றிக்கு நிமிர்ந்து பார்க்க முடியாது. கீழே பார்த்த வண்ணம் தான் செல்லும்.
பாவமுள்ள இருதயம் அசுத்தமான எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும். நம் சரீரம் தேவனுடைய ஆலயம். அதை கெட்டபழக்கங்களான புகை பிடித்தல், போதை மருந்துகளை உபயோகித்தல் என இப்படிப்பட்ட பாவ செயல்களால் நாம் தீட்டுப்படுத்துகிறோம். நாம் செய்கின்ற பாவங்கள் நம்மை அடிமைப்படுத்துகிறது. பெருந்தீனிக்காரன் கடவுளின் பார்வையில் அருவருப்பானவன். நாம் வாழ்வதற்காக உண்கிறோம். உண்பதற்காக வாழவில்லை. பசி, புசிப்பதன் மூலம் திருப்தியாகும். உபாகமம் 21:18- 21 பெருந்தீனிக் காரனும் குடியனும் கல்லெறியப்பட வேண்டும். போஜனப்பிரியன் மாம்சஇச்சைக்கு அடிமை. வேதத்திலே தானியேல், ராஜாவின் போஜனத்தினாலும், அவர் பானம் பண்ணும் திராட்ச ரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணினபடியால், அதை உண்ணும் வாய்ப்பு கிடைத்த போதும் அதை நீக்கி வைத்து தீர்மானமாய் பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் உட்கொண்டார்கள். ஆகையால் அவர்கள் ராஜமேன்மை பெற்று ராஜசமுகத்தில் நின்றார்கள். எபேசியர் 5: 18, 19 ல் துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறி வேண்டாம். பாட்டுகளினால் ஆண்டவரை துதித்து, உங்கள் இருதயத்தை மகிழ்ச்சியால் பொங்கி வழியச் செய்யுங்கள். ஆகையால் நாம் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம் பண்ணுவோம்.
மத்தேயு 7:6 ல் "உங்கள் முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது விலையேறப்பெற்ற ஒன்றை, அதன் மதிப்பே தெரியாத பன்றிகள் முன் போட வேண்டாம். அதற்கு தெரிந்ததெல்லாம் அசுத்தம் ஒன்றுதான். மேலும் மதிகேடாய் நடக்கிற அழகுள்ள பெண், பன்றியின் மூக்கிலிருக்கும் பொன் மூக்குத்திக்கு சமம் என்று வேதம் எச்சரிக்கிறது. ஒரு பெண் அழகில் சிறந்தவளாயிருந்தாலும் மதியற்ற விதமாய் நடந்து, பேசி அவள் வாழ்வு தாறுமாறாய் இருக்குமானால், அவள் தங்கம் போல அழகில் மின்னினாலும், அவள் இருக்கும் இடம், வாழும் முறை மதிக்கத்தக்கதல்ல, வீணானது. தேவன் பன்றியின் மூலம் நம்மை எச்சரிக்கிறார். நம் இருதயம் எதை விரும்புகிறது? மேலானவைகளையா? அல்லது கீழானவைகளையா? பெருந்தீனிக்கு இடம் கொடுக்கிறோமா? மதியற்ற பெண்ணாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? சிந்திப்போம். எனக்கன்பானவர்களே! பூமிக்கடுத்த காரியங்களையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். உலகம், மாமிசம் இப்படிப்பட்ட உலகத்தின் பாவங்களில் சிக்கி உழன்று கொண்டிருக்காமல் நம் இரட்சகரையே நோக்கிப் பார்ப்போம்.
- Mrs. கிரேஸ் ஜீவமணி
ஜெபக்குறிப்பு:
எல்லா மாவட்டங்களிலும் 24 மணி நேர சங்கிலி தொடர் ஜெபம் நடைபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864