இன்றைய தியானம்(Tamil) 18.02.2025
இன்றைய தியானம்(Tamil) 18.02.2025
ஈ
"செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறிக் கெட்டுப் போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்" - பிர. 10:1
"ஈ" என்றதும் நம் நினைவிற்கு வருவது நாம் சிறு வயதில் கற்றுக் கொண்ட பாடலான "இலையில் சோறு போட்டு, ஈயைத் தூர ஓட்டு" என்ற பாடலே! ஈக்கள் காற்றில் பறந்து செல்லும் பட்சி இனம். இது காற்றையும் அசுத்தம் செய்து, செல்லும் இடமெல்லாம் அசுத்தத்தை சுமந்து சென்று நோய்க் கிருமிகளை பரப்பும் உயிரினம். ஆனால் அவை சூடான உணவில் அமராது. அதுபோல நாமும் நம் ஆவிக்குரிய வாழ்க்கையிலே அனலாய் இருப்போமானால் ஈக்களை ஒத்த அசுத்தங்கள், பாவங்கள் நம்மை ஆட்கொள்ள முடியாது.
ஈக்கள் தங்களுடைய நுகரும் தன்மையைக் கொண்டு உணவுகளை கண்டுபிடிக்கும். ஈக்களால் 360 ° அதாவது எல்லா கோணங்களிலும் பார்க்க முடியும். மேற்கண்ட வசனத்திலே வாசனைமிக்க, விலையேறப்பெற்ற தைலத்தை கெட்டு நாறிப் போகப் பண்ண ஒரு செத்த ஈ போதும் என்று ஞானி கூறுகிறார். ஞானத்திலும், கனத்திலும் பேர்பெற்றவனை சொற்ப மதியீனம் கெட்டு நாறிப்போகப் பண்ணும். உதாரணமாக உசியா ராஜாவின் வாழ்க்கையிலும் "மேட்டிமை" என்ற ஈ அவருடைய அனைத்து நற்குணங்களையும் அழித்து விடுகிறது. ஆசாரியர்கள் மட்டுமே செய்யும் பலிபீடத்திற்கு தூபம் காட்டும் வேலையை செய்ய முடியும் என்ற மேட்டிமை! தேவனுடைய கட்டளையை மறந்து சுயம் மேலோங்கியது. மேட்டிமை என்னும் செத்த ஈ அவனது வாசனை மிக்க வாழ்வை வீணாக்கி விட்டது. கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்கும். (1 கொரி 5 :6 ). பிசாசுக்கு இடம் கொடாதிருங்கள் என்று வேதம் நமக்கு ஆலோசனை சொல்லுகிறது. தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல, பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். (1தெச 4 : 7 )
பிரியமானவர்களே! ஒரு செத்த ஈ, விலையேறப்பெற்ற தைலத்தைக் கெடுத்து விடும். நம் வாழ்வில் காணப்படுகின்ற ஒரு சிறு பாவம் கூட, நம் முழு வாழ்வையும் இடறச் செய்து விட முடியும். ஆகவே நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். நம்மிடம் எத்தனை நல்ல குணங்கள் இருந்தாலும், ஒரு தீய குணம் நம்மிடம் இருக்குமாயின் அது அனைத்தையும் கெடுத்து விடும். ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் அது விஷமாகிவிடுமல்லவா? சுத்தமான குடிதண்ணீரில் ஒரு சொட்டு சாக்கடைத் தண்ணீர் விழுந்தால் அதை குடிக்க முடியுமா? நாமும் நமது அன்றாட வாழ்வில் அசுத்தத்தைப் பரப்பும் ஈ போன்று இராமல் பரிசுத்தமாய், தேவனுக்கு பிரியமான ஒரு ஜீவியம் செய்து வாழ, நாம் தேவனுடைய ஒத்தாசையை நாடுவோமேயானால் நிச்சயமாகவே தேவன் நமக்கு உதவி செய்வார்.
- Mrs. ரெஜீனா சுஜித்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு மாநிலங்களிலும் 500 மிஷனெரிகள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864