Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 08.02.2025

இன்றைய தியானம்(Tamil) 08.02.2025

 

தீக்குருவி

 

"தேவன் அதற்குப் புத்தியைக் கொடாமல், ஞானத்தை விலக்கிவைத்தார்" - யோபு 39: 17

 

ஆப்பிரிக்க கண்டத்திலும், அரபிய நாடுகளிலும் சீரிய தென்கிழக்கு வனாந்தரங்களிலும் இந்த நெருப்புக்கோழிகள் என அழைக்கப்படும் தீக்கோழிகள் அதிகமாக காணப்படுகின்றன. 2.5 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய உலகிலேயே மிக உயரமான பறவை. இவைகளின் சிறகுகள் ஆறு அடிகள்! இதன் கால்கள் மிகவும் உறுதியானவை. மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. ஒரே உதையில் ஒரு மனிதனை கொல்லும் அளவிற்கு இதன் கால்களில் பலம் உண்டு. இவற்றின் இமைகள் மிகவும் உறுதியானது. எப்படி என்றால் தன் எதிரிகளை இவைகள் பார்க்கும்போது தன் தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொள்ளுமாம். இதன் உடல் வெளியே தெரியுமாம். வேட்டைக்காரர்கள் இவைகளை எளிதில் வேட்டையாடி விடுவார்களாம். ஏனென்றால் இவைகளுக்கு மூளை மிகவும் சிறியது. ஞானத்தை தேவன் விலக்கி வைத்தார் என வேதமும் கூறுகிறது. இது மணலைக் கிளறி தங்களது முட்டைகளை இட்டுக் கொள்ளும். இவைகள் தரையில் முட்டையிடுவதால், காட்டு மிருகங்களின் கால்களில் மிதிபட்டு உடைந்து சேதமாகின்றன. இதனுடைய குஞ்சுகளை யாரும் கொன்றாலும் அல்லது இறந்து போனாலும் அதனைக் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட குணாதிசயத்தை கொண்ட நெருப்புக்கோழி மூலம் தேவன் நமக்கு சொல்லுவது என்ன?

          

மனிதன் இந்த உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? அநேக நேரம் மனிதர்கள் பணம் சம்பாதிப்பதிலும் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதிலும் வெகு பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேவன் தந்த குடும்பத்தை கவனிப்பதில்லை, நேரத்தை அவர்களுக்கு கொடுப்பதில்லை, தேவன் கொடுத்த உறவுகளை விசாரிப்பதில்லை இன்னும் அனேகம் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த உலகம் பணம் வைத்திருப்பவரை கொண்டாடுகிறது. சமுதாயத்தில் பதவியோடு இருக்கிறவர்களைத் தேடி ஓடுகிறார்கள் மனிதர்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ சந்தோஷம், சமாதானத்தை இலவசமாய் கொடுக்க விரும்புகிறார். அதைப் பெற்றுக்கொள்ள விருப்பமில்லை. என்ன ஒரு முட்டாள்தனம்! நெருப்புக்கோழி பெரிதாக இருந்தும் ஞானம் இல்லாமல் செயல்படுகிறது.

     

 பிரியமானவர்களே! நாமும் நம் சொந்த குடும்பத்தின் மீது அக்கறையின்றி, பிள்ளைகள் செல்லும் வழிகளைக் குறித்து கவனமின்றி, அவர்கள் ஆத்துமாக்களைக் குறித்து கவலையற்றிருப்போமானால், இந்த நெருப்புக்கோழியைப் போன்றவர்களே! பணம், பெயர், புகழ், அந்தஸ்து என உலகின் பார்வையில் பெரிதாய் தோன்றுகிறவைகளையே நோக்காமல் தேவன் தந்த குடும்பத்தை வழிநடத்திட தேவனிடம் ஞானத்தைக் கேட்போம். ஆமென்.

- Bro. அனீஸ் ராஜா

 

ஜெபக்குறிப்பு: 

கண்மணி பிள்ளைகள் ஜெபத்திட்டத்தில் இணைந்துள்ள பிள்ளைகளின் ஞானத்திற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)