இன்றைய தியானம்(Tamil) 31.01.2025
இன்றைய தியானம்(Tamil) 31.01.2025
NAVIGATORS
"ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்,…" - மத்தேயு 24:14
டாசன் டிராட்மேன் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். வேத வசனங்களை நன்கு மனப்பாடம் செய்து ஒப்புவிப்பார். ஆனால் அனுதின வாழ்வில் திருடனாகவும், குடிகாரனாகவும் வாழ்ந்து வந்தார். சபையில் ஒரு நாள் யோவான் 5 : 24 ஐ கொண்டு தேவன் அவரோடு இடைப்பட்டார். 1920 இல் லெஸ் பென்சர் என்ற கப்பலோட்டி, டாசனிடம் அவரின் சாட்சியையும், சுவிசேஷத்தையும் தன் சக கப்பலாட்களுக்கு பிரசங்கிக்குமாறு அழைத்தார். டாசன் ஒப்புக்கொண்டு சென்றார். அங்கு 12 பேர் இருந்தனர். அந்த 12 பேரும் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு, மேலும் 24 பேரை ஆதாயம் செய்தனர். இந்த ஊழியம் சங்கிலித் தொடராக வளர்ந்தது. விரைவில் 125 பேர் ஆண்டவரை ஏற்றுக்கொண்டனர். உடனே "NavigatorsMinistry" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். "நேவிகேட்டர்ஸ்" என்றால் உலகம் என்னும் கடலில், வாழ்க்கை என்னும் படகை ஓட்டிச் செல்பவர்கள். இவ்வியக்கத்தின் மூலம் பல கிறிஸ்தவர்கள் உலகின் பல பகுதிகளுக்கு மிஷனெரிகளாக அனுப்பப்பட்டனர். பலர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டனர்.
இயேசுகிறிஸ்து சொன்ன ஒரு உவமையிலே, பரலோக ராஜ்யம் புற தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், அவன் தன் ஊழியக்காரரை அழைத்து, வேலைக்காரரின் திறமைக்கேற்ப ஐந்து, இரண்டு, ஒரு தாலந்து என கொடுத்து செல்கிறார். அவர் வெகு நாட்கள் கழித்து திரும்பி வரும்போது, ஐந்து தாலந்து வாங்கினவன், மேலும் ஐந்து தாலந்துகளை சம்பாதித்திருந்தான். இரண்டு தாலந்து வாங்கினவனும் இரண்டு தாலந்துகளை சம்பாதித்திருந்தான். ஒரு தாலந்து வாங்கினவனோ அதைப் புதைத்து வைத்தான். எஜமான் மற்றவர்களை பாராட்டி விட்டு, ஒரு தாலந்து கொடுத்தவனிடம் அதை வாங்கி ஐந்து தாலந்து உள்ளவனிடம் கொடுத்து விட்டு அவனை புறம்பான இருளில் போடச் சொன்னார். நாம் இலவசமாய் அவருடைய கிருபையினாலே இரட்சிக்கப்பட்டுள்ளோம். இந்த இரட்சிப்பை நாம் பிறருக்கு இலவசமாய் கொடுத்து தேவனின் ராஜ்யம் விரிவடைய செயல்பட வேண்டும். உலகம் என்னும் கடலில், பல அலைகளின் நடுவே வாழ்க்கை என்னும் கப்பலை ஓட்டிச் செல்ல பலர் கஷ்டப்படுகின்றனர். நாம் சுவிசேஷத்தை அறிவித்து அவர்கள் கப்பல் சேதமாகாமல் கரை சேர்க்க உதவி செய்வோம். அப்போது அந்தக் கப்பல் பரலோக கரை வந்து சேரும்.
அன்பரே! பல தேவபிள்ளைகள் வந்து சுவிசேஷத்தை அறிவித்ததின் பயனாகத்தான் நம் கப்பல் உலக கவலைகள், கஷ்டங்கள் போன்ற அலைகளினால் அடிபடும் போது சேதமாகாமல், "விசுவாசம்" என்னும் நங்கூரமிடப்பட்டு பாதுகாப்பாய் இருக்கிறது. இன்னும் உலகில் பல மக்கள் தங்கள் வாழ்க்கை என்னும் கப்பலை செலுத்த முடியாமல் தவித்து நிற்கின்றனர். அவர்களுக்கு அவர்கள் நங்கூரங்களை எங்கே போடுவது என்பதை நீங்கள் கற்றுக் கொடுத்து நீங்களும் "Navigators" ஆக மாறுங்கள். டாசன் டிராட்மேன் அவர்களின் "NavigatorsMinistry" யை நாம் தொடர்ந்து செய்வோமா?
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு
நம் வளாகத்தில் நடைபெறும் மருத்துவமனை ஊழியங்களின் மூலம் பயனடைவோர் பரிகாரியாம் கிறிஸ்துவை அறிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864