இன்றைய தியானம்(Tamil) 30.01.2025
இன்றைய தியானம்(Tamil) 30.01.2025
சுவிசேஷம் சொல்லத் தயங்காதே
"கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்;... விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது" - ரோமர் 1:16
பிரேசில் நாட்டில் கார்லோஸ் என்பவர் மாடோ கிராசோ என்னும் ஊருக்குச் செல்ல ஒரு லாரியில் பயணப்பட்டார். லாரி ஓட்டுனர் கார்லோசிடம் எப்படியெல்லாமோ பேசிப்பார்த்தும் கார்லோஸ் கடைசி வரை மௌனமாகவே இருந்து, விடைபெற்றுச் சென்றார். இவர் புறப்படும் போது லாரி ஓட்டுனர், ஒரு சிறு "புதிய ஏற்பாட்டை" எடுத்துக் கொடுத்து, 'உமக்குச் சமயம் வாய்க்கும்போது தயவுசெய்து இதை வாசியும்' என்றார். வேண்டா வெறுப்பாக வாங்கிக் கொண்ட அவர் ஏதோ சிந்தனையில் நடந்து சென்றார்.
அநேக மாதங்கள் கழித்து ஒரு நாள் அந்த லாரி ஓட்டுனர் ஆலயம் சென்ற பொழுது அங்கே கார்லோஸைப் பார்க்க நேரிட்டது. அவரிடம் என்னை உமக்குத் தெரியுமா? என்று கேட்க, கார்லோஸ் தெரியுமாவா? நீர் எனக்குக் கொடுத்த புதிய ஏற்பாட்டை நான் பெற்றுக் கொண்ட அன்று ஒரு மனிதனைக் கொலை செய்யப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது யாரோ என் சட்டையைப் பிடித்து இழுப்பது போன்று உணர்வு ஏற்பட்டது; திரும்பிப் பார்த்தால் ஒருவரையும் காணோம். திகைத்தவனாய் அங்கேயே உட்கார்ந்த நான், சிறிது நேரம் கழித்து நீர் கொடுத்த புதிய ஏற்பாட்டைத் திறந்து வாசித்தேன். வாசிக்க வாசிக்க அம்மனிதனைக் கொல்லக் கூடாது என்ற எண்ணமே என் முடிவாக இருந்தது. இப்பொழுது நான் ஒரு மனந்திரும்பிய மனிதனாக இருக்கிறேன் என்று மகிழ்வுடன் கூறினார்.
அன்பான தேவப்பிள்ளையே! அந்த லாரி ஓட்டுனர் கொடுத்த புதிய ஏற்பாட்டால் இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டன. ஒரு வேளை இவர் புதிய ஏற்பாட்டைக் கொடுக்கத் தயங்கி இருப்பாரென்றால், ஒருவர் கொலையாளியாய் மாறியிருப்பார், மற்றொருவர் கொலை செய்யப்பட்டிருப்பார். ஒருவர் இயேசு கிறிஸ்துவில் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டார், மற்றொருவர் உலகத்தில் வாழ ஜீவனைப் பெற்றுக் கொண்டார்.
நாம் சுவிசேஷம் சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும். வெட்கப்படக் கூடாது. இதுவே நம் வேலை. நம் வேலையை நாம் சரியாய்ச் செய்தால், கர்த்தரும் அவர் கிரியையைச் செய்து முடிப்பார். வேதம் சொல்கிறது "அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்." (ஏசாயா 55:11) ஆகவே சுவிசேஷத்தைத் தயங்காமல் சொல்லுவோம்; வழி தப்பினோரை நல் வழியில் சேர்ப்போம்.
- Mrs.பிரிசில்லா தியோபிலஸ்
ஜெபக்குறிப்பு
மோட்ச பயணம் பத்திரிகை மூலம் ஆரம்ப விசுவாசிகளின் வாழ்வு கட்டி எழுப்பப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864