இன்றைய தியானம்(Tamil) 29.01.2025
இன்றைய தியானம்(Tamil) 29.01.2025
வெறுமையாக்கின பெருமை
"ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது;..." - ஆதி. 1:1,2
வேதாகமத்தின் முதல் இரண்டு வசனங்கள் தான் இவை. ஆண்டவர் வானத்தையும் பூமியையும் படைக்கின்றார். கடவுள் தான் படைக்கும் படைப்பினை நிச்சயமாகவே நேர்த்தியாகப் படைத்திருப்பார். ஆனால் அடுத்த வசனம் பூமியானது ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்ததைக் குறிப்பிடுகிறது. கடவுள் படைத்த நேர்த்தியான உலகுக்கு நடந்தது என்ன?
இறையியலாளர்கள், இது பற்றி கூறும்போது முதல் வசனத்துக்கும், இரண்டாம் வசனத்துக்கும் இடையில் பல்லாயிரம் ஆண்டுகள் இடைவெளி இருந்திருக்க வேண்டும். இந்த இடைவெளியில்தான் பிசாசு, தன்னுடைய பெருமையினால் பூமியில் விழத்தள்ளப்பட்டிருக்க வேண்டும். அழகான இவ்வுலகில் விழுந்த சத்துரு, பூமியின் மீது தன்னுடைய ஆத்திரத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தி, பூமியை ஒழுங்கற்று வெறுமையாய் மாற்றினான் என்று கூறுகிறார்கள்.
எனவே மீண்டும் இவ்வுலகை கடவுள் சீரமைக்கிறார். சூரியன், சந்திரன், இயற்கை வளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சீர்படுத்தி, மனிதனுக்கு ஆசீர்வாதமான பூமியாக வழங்குகிறார். பாருங்கள், கடவுள் படைத்த உலகை தன்னுடைய பெருமையினால், தண்டனை பெற்ற பிசாசு அழிக்கக் கூடுமானால், பெருமையினால் நம்முடைய வாழ்வும்தானே கெட்டுப் போக நேரிடும். பெருமை வரும்போது அங்கே ஒழுக்கம் கெட்டுப்போய், ஒழுங்கற்ற நிலை வந்து விடுகிறது. எங்கே ஒழுக்கம் இல்லையோ அங்கே வெறுமை தலைக்காட்ட ஆரம்பிக்கிறது. அன்புநண்பரே! இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ கடவுள் நம்மை அழைக்கவில்லை. நாம் சீர்படுத்தப்பட, பரிசுத்த வாழ்வு வாழ, நம்முடைய வாழ்வு செப்பனிடப்பட தேவன் விரும்புகிறார்.
இஸ்ரவேல் நாட்டின் பிரதமராக இருந்தவர் டேவிட் பென் கொரியன். இவர் கையில் எப்போதும் பூட்டிய பெட்டி ஒன்று இருக்கும். தன்னுடைய பதவியை தவறாக பயன்படுத்தி சேர்த்து வைத்துள்ள பணத்தை டேவிட் பென் அப்பெட்டியில் வைத்துள்ளதாக குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். பாராளுமன்ற கூட்டத்தில், அப்பெட்டியை திறந்து காட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வற்புறுத்தினர். பொறுமையாக டேவிட் பென் அப்பெட்டியை திறந்தார். அதில் ஒரு கோட்டும், கம்பு ஒன்றுமே இருந்தன. தான் சிறு வயதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, இவை தனக்கு பயன்பட்டன என்றும், தன்னுடைய பதவியினால் எப்போதும் பெருமையான எண்ணம் தனக்குள் வந்து விடக்கூடாது என்றும், அப்படி எண்ணம் வரும்போது அப்பெட்டியை திறந்துப் பார்த்து தன்னுடைய பழைய வாழ்வை மறந்து விடாமல் இருக்கவே இவைகளை கூடவே வைத்திருப்பதாகவும் கூறினார். அவரைப் பற்றி பேசியவர்கள் வெட்கப்பட்டனர்.
ஆம், ஆண்டவரின் பிள்ளைகளே, இன்றும் கூட நாம் கடவுளின் பிள்ளைகள், தாழ்மை தரித்தவர்களாய் வாழ்வோம். தாழ்மை உள்ளவர்களுக்கு கிருபை அளிக்கும் ஆண்டவர் நம்முடைய வாழ்வை மீண்டும் சீர்படுத்துவார், மேன்மைப்படுத்துவார். மேன்மைக்கு முன்னானது தாழ்மை. நமது ஆண்டவர் சாந்தமும், மனத்தாழ்மையுமுள்ளவர். இன்றைய நாளில், நாம் நம்மை ஆண்டவருடைய சமுகத்தில் தாழ்த்தி அவரிடம் இருந்து கிருபையையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்வோம்.
- Rev. எலிசபெத்
ஜெபக்குறிப்பு
நம் வளாகத்தில், பணித்தளங்களில் பசித்தோர்க்கு உணவளிக்கும் திட்டத்தில் பயனடைவோர் கர்த்தரின் அன்பை அறிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864