Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 18.01.2025

இன்றைய தியானம்(Tamil) 18.01.2025

 

வெளியே எறிந்துவிடு

 

"…கப்பற்காரர் பயந்து,... கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்;..." - யோனா 1:5

 

இரு நண்பர்கள் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாக படித்து வேலையினிமித்தம் பிரிந்திருந்தார்கள். ஒருநாள் இருவரில் ஒருவர் நண்பா! உன்னைப் பார்க்க உன் வீட்டிற்கு வருகிறேன் என்றார். அய்யோ! நண்பன் வருகிறாரே இன்றைக்குப் பார்த்து என் வீட்டில் ஒரு எலி செத்து நாற்றம் வீசுகிறதே! என்று அங்கும் இங்குமாக தேடி எடுத்து எறிந்து விட முயற்சிகள் மேற்கொண்டார். செத்த எலி எங்கு கிடக்கிறது என்று தெரியவில்லை. வீடு முழுவதும் ஒரே நாற்றம். என்ன செய்வது என்று தெரியாமல் ரூம் ஸ்பிரே (வாசனை திரவியம்) அடித்தார். வீடு முழுவதும் நல்ல மணம் உண்டாயிற்று. நாற்றம் தெரியவில்லை. நண்பன் வந்ததும் மகிழ்ச்சி அடைந்தார். பின்பு இருவரும் பழைய அனுபவங்களை பேசிக்கொண்டிருந்தார்கள். நேரம் கடக்க, கடக்க வாசனை குறைந்தது, நாற்றம் தெரிய ஆரம்பித்தது. நண்பன் சிறிது நேரம் சமாளித்தார், முடியவில்லை! நண்பா நான் போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டு போனார்.

 

இங்கே யோனா தேவனது வார்த்தைக்கு (கட்டளைக்கு) கீழ்ப்படியாமல், நினிவேக்கு போகாமல் தர்ஷீசுக்கு கப்பல் ஏறினான். இதைக் கண்ட தேவன் சமுத்திரத்தின் மேல் பெருங்காற்றை கட்டளையிட்டார். உடனே சமுத்திரத்தின் மேல் பெரும் அலைகள் உண்டாகி, கப்பல் முன்னேறி செல்ல விடாமல் பெருங்காற்று தடுத்தது. கப்பலில் பயணம் செய்தவர்கள் தங்கள், தங்கள் தெய்வத்தின் உதவியை நாடினார்கள். பிரயோஜனம் ஒன்றுமில்லை. தங்களிடமிருந்த பொருட்களை கப்பலில் இருந்து எடுத்து சமுத்திரத்தில் எறிந்தார்கள். ஆனாலும் பயனில்லை. கடைசியாக ஆராய்ந்து அறிந்த போது யோனாவால் தான் இந்த தடை என்று கண்டு, யோனாவைக் கடலில் தூக்கி எறிந்தார்கள், கப்பல் அமைதியாக தன் பயணத்தை தொடர்ந்தது. எறிய வேண்டியது யோனாவை, பொருட்களையல்ல.      

 

பிரியமான தேவமக்களே! நம்மிடம் காணப்படுகின்ற போராட்டம், பிரச்சனைகளுக்கு காரணம் தெரியாமல் எந்த முயற்சியை மேற்கொண்டாலும் பலன் கிடைக்காது. சமாதானம், சந்தோஷம், அமைதி, ஆசீர்வாதம் பாதிக்கப்படுகிறது எதினால் என்று. தேவனிடம் நம்மை ஒப்புக் கொடுத்து காரணங்களை கண்டறிந்து அவைகளை நம்மை விட்டு எடுத்து எறிந்து விடவேண்டும். அப்படிச் செய்யாமல் வேறு எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும் தற்காலிக நிவாரணம் கிடைக்கலாம், ஆனால் அது நிரந்தரமல்ல. நாற்றத்தைப் போக்க வாசனையை உண்டாக்கலாம். அது நிரந்தரமானதல்ல, திரும்பவும் நாற்றம் வரும். ஆதலால், நம்முடைய குடும்பத்திலோ, தனிப்பட்ட வாழ்க்கையிலோ போராட்டமா? ஆராய்ந்து பார்த்து செப்பனிடுவோம். தேவையில்லாதவற்றை எறிந்து விடுவோம். நிரந்தர மன ஆறுதலடைவோம்! கர்த்தர் ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

- Sis. எப்சிபா இம்மானுவேல்

 

ஜெபக்குறிப்பு:

புதிதாக 50 இடங்களில் டியூஷன் சென்டர் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)