இன்றைய தியானம்(Tamil) 26.11.2024 (Gospel Special)
இன்றைய தியானம்(Tamil) 26.11.2024 (Gospel Special)
இசைவழி நற்செய்தி
"…சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும்... வந்ததும்,... சிங்காசனத்திற்கு முன்பாகவும்... நிற்கக்கண்டேன்" - வெளி. 7:9
நாகர்கள் மத்தியில் ஊழியம் செய்ய ஒரு மிஷனெரி விரும்பினார். அப்போதிருந்த பிரிட்டீஷ் அரசு அவரைத் தடுத்தது. போலீஸ் பாதுகாப்புடன் செல்லுங்கள் என ஆலோசனை கொடுத்தது. அப்படிச் சென்றால் நற்செய்தி அறிவிப்பது வெற்றி பெறாது என உணர்ந்தவர், ஒரு கையில் வேத புத்தகமும், மற்றொரு கையில் இசை கருவியையும் எடுத்துக்கொண்டு நாகாலாந்துக்குள் சென்றார். "விக்டோரியா மகாராணியின் கைக்கூலியே திரும்பிப் போய்விடு" என்று கத்தியபடி கையில் தடியுடன் நாகர்கள் ஓடி வந்து அவரைச் சுற்றி நின்றனர். "ஒரு அடி எடுத்து வைத்தாலும் உன் உயிருக்கு ஆபத்து" என்று மிரட்டினர். மிஷனெரியோ புன்னகையோடு இசைக்கருவியை மீட்டி, நாகர் மொழியில் பாடத் தொடங்கினார். தடிகளை எறிந்துவிட்டு இசையில் மயங்கினர் நாகர்கள். பாடல் முடிந்ததும் "இன்னொரு பாடல் பாடுங்கள்" என்றனர். பாடினார், அகமகிழ்ந்த நாகர்கள், "எங்கள் ஊருக்கு வந்து இந்தப் பாடலை எல்லாருக்கும் கற்றுக் கொடுங்கள்" என்று அவரை அழைத்துச் சென்றனர். ஊழியத்திற்கு வழி திறந்தது. அனேகர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர்.
வேதத்திலும் யோவான் 4 ஆம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து சமாரிய
பெண்ணிடம் "தாகத்துக்குத்தா" எனக் கேட்டு, அவளோடு உரையாடுகிறார். அவளது தகாத வாழ்வை, நாகரீகமாக சுட்டிக் காட்டி, அவளுடைய கேள்விகளுக்கு பதில் கூறி அவளுடைய ஆன்மீகக் கண்களைத் திறந்தார். தண்ணீர் எடுக்க வந்த அவள் குடத்தை வைத்துவிட்டு ஊருக்குள்ளே சென்று, "நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் கிறிஸ்து தானோ"? என்றாள். ஊரார் புறப்பட்டு இயேசு கிறிஸ்துவிடத்தில் வந்தார்கள். உபதேசம் கேட்டார்கள். தங்களிடத்தில் தங்க வேண்டும் என்றார்கள். இரண்டு நாட்கள் அங்கு இயேசு கிறிஸ்து தங்கினார். அநேக சமாரியர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். தவறான வாழ்வு வாழ்ந்த ஒரு பெண், ஊராருக்கு பயந்து, மதிய வேளையில் தண்ணீர் எடுக்க வந்தவள், இயேசு கிறிஸ்துவை சந்தித்ததும் ஊருக்குள் துணிந்து போய், வெட்கப்படாமல் தன்னையே சாட்சியாக்கி, இயேசுவிடம் அந்த ஊராரை வழி நடத்தினாள் என்றால், நாம் மற்றவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த வேண்டியது எவ்வளவு அத்தியாவசியமான, நம் மேல் விழுந்த கடமை!
வெளிப்படுத்தலில் வாசிக்கிறபடி ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக சகல ஜாதிகளிலும், கோத்திரங்களிலும், ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து எண்ணக் கூடாத திரள் கூட்டமாகிய ஜனங்கள் நின்றார்கள் என்று பார்க்கிறோம். மனிதர்களை அடித்து சாப்பிடும் நாகர்களுக்கும் இயேசு தேவை. யூதர்கள் அருவருக்கும் சமாரியர்களுக்கும் தேவை. எனவே விருப்பு, வெறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டு எல்லோரையும் நேசிப்போம். தேவன் நமக்கு கொடுத்த தாலந்தின்படி எல்லாருக்கும் சுவிசேஷம் சொல்லுவோம்.
- Mrs. வனஜா பால்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நம் வளாகத்தில் நடைபெறும் மருத்துவமனை ஊழியத்தின் மூலம் பயன் பெறும் மக்கள் கர்த்தரை அறிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864