இன்றைய தியானம்(Tamil) 04.10.2024
இன்றைய தியானம்(Tamil) 04.10.2024
CALL பண்ணுங்க
"ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்" - சங்கீதம் 50:15
சாம் தன் நான்கு வயது மகள் சாராவுக்கு நித்தம் இரவு படுக்கைக்கு செல்லும் முன் பைபிள் கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்வதுண்டு, கதை கேட்டுக் கொண்டே தூங்கப் போவாள் சாரா. அன்றும் அப்படியே சாம், யோசேப்பின் வாழ்வில் நடந்த சம்பவங்களை சொல்ல ஆரம்பித்தான். “யோசேப்பு அவன் அப்பாவிற்குச் செல்ல பிள்ளை. பத்து அண்ணன்மார் ஒரு தம்பி எனச் சகோதரர்கள் இருந்தனர். அப்பாவுக்கு கீழ்ப்படிந்து இருப்பான். கர்த்தருக்கு பயந்தவனாய் இருந்தான். அண்ணன்மார் எந்த தவறு செய்தாலும், அப்படியே தன் அப்பாவிடம் சொல்லி விடுவதால் எல்லாரும் யோசேப்பை வெறுத்தாங்க. ஒரு நாள் தன் அண்ணன்களையும், ஆட்டு மந்தையையும் பார்த்து வர தொலை தூர ஊருக்கு அனுப்பினார் அவன் அப்பா. பொறாமை கொண்ட அண்ணன்மார் அவனை அடித்து அவனை தண்ணீரில்லாத ஒரு ஆழமான குழியிலே போட்டுட்டு போயிட்டாங்க”. இடைமறித்த சாரா “அப்பா யோசேப்பு உடனே அவங்க அப்பாவுக்கு போன் போட்டு ஏன் சொல்லலை? என்று வினா எழுப்பியதும், சாமின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. புருவம் உயர தன் மகளின் மதிநுட்பம் கண்டு வியந்தான்.
ஆம்! சாராவின் கேள்வி பொருள் பொதிந்தவை. அது நூற்றுக்கு நூறு உண்மையல்லவா! எந்த பிள்ளையும் தனக்கு ஆபத்து வரும் வேளையில் தன் தகப்பனை சத்தமிட்டு அழைக்கும் உரிமை பெற்றிருக்கிறது என்ற உணர்வும், உண்மையும் நம்மை வியக்கச் செய்கிறதல்லவா! ஆம், நமக்கு ஒரு பரம தகப்பன் இயேசு இருக்கிறாரே, நாம் எந்த வேளையிலும், எந்த சூழ்நிலையிலும் அவரை அழைக்க உரிமை தந்திருக்கிறார். சங்கீதம் 91: 15ல் அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்” என்று எழுதப்பட்டுள்ள வார்த்தை நம்மை பெலனடைய செய்கிறதல்லவா! பிலிப்பியர் 4: 6 ல் “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்". என்பதாக நாம் அறியலாம் .
அன்பானவர்களே! எனக்கு யாரும் இல்லை என்று திகைத்து, கலங்கி போயிருக்கிறீர்களா? இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று உரக்க கூப்பிட்ட பர்திமேயு என்ற பிறவிக் குருடனிடம் உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்ட இயேசுவிடம், அவன் கேட்ட காரியம் நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆம்! அவன் “நான் பார்வையடைய வேண்டும்” என்றான். இயேசு “நீ பார்வையடைவாயாக” என்றார். பெரிய காரியம் கேட்டான். அவரால் பார்வை தர முடியும் என்று விசுவாசத்தோடு கேட்டான். பெற்றுக் கொண்டான். (லூக்கா 18: 41, 42) அவரால் கூடாதது எதுவுமில்லை; “கேளுங்கள் கொடுக்கப்படும்.” கூப்பிடுங்கள். பதில் தருவார். தேவனுக்கே மகிமை! ஆமென்!!
- Mrs. எமீமா சௌந்தர்ராஜன்
ஜெபக்குறிப்பு:
25,000 கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்க தேவையான கைப்பிரதிகள், முழு வேதாகமங்கள் தேவைகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864