இன்றைய தியானம்(Tamil) 15-02.2023
இன்றைய தியானம்(Tamil) 15-02.2023
புதிய ஆரம்பம்
"இதோ, போரடிக்கிறதுக்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்” - ஏசாயா 41:15
நான் இருந்த கிராமத்தில் அன்பான ஒரு குடும்பம் வசித்து வந்தது. அந்த குடும்பத்தின் தலைவர் ஷேர் மார்க்கெட்டிங் பிசினஸ் மூலம் லாபம் ஈட்டி சந்தோஷமாக வாழ்ந்து வந்த சூழ்நிலையில், திடீரென்று ஒரு நாள் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தன்னுடைய பிசினஸ் பார்ட்னர் பல லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு ஏமாற்றி விட்டதாக அந்த தொலைபேசி அழைப்பில் கூறப்பட்டது. வாழ்க்கையில் பணம், பொருள், எல்லாவற்றையும் இழந்து அவமானம் தோல்வி ஏமாற்றங்களோடு “வாழ்க்கையை இழந்து விட்டோம், எல்லாம் முடிந்தது" என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். சோர்ந்து போன நிலைமையிலே தன்னுடைய தேவனுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, ஊழியத்திற்கு அர்ப்பணித்ததினிமித்தம் தேவன் அந்த சகோதரனுடைய வாழ்க்கையில் ஒரு புதிய ஆரம்பத்தைக் கொடுத்து, இன்று ஊழியப் பாதையில் அநேகருக்கு ஆசீர்வாதமாக மாற்றி, இழந்து போன சந்தோஷத்தையும் சமாதானத்தையும் திரும்பப் பெறுவதற்கு தேவன் உதவி செய்தார்.
இதைப் போல ஒரு சம்பவம் தான் இயேசுவின் சீடனாகிய சீமோன் பேதுருவின் வாழ்க்கையிலும் நடந்தது. இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர்தான் இந்த சீமோன் பேதுரு. சீமோன் என்றால் "செவி கொடுப்பவர்" என்றும் பேதுரு என்றால் "பாறை” என்றும் அர்த்தம். மீன் பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தார் சீமோன் பேதுரு. கலிலேயா கடல் ஒன்றும் அவருக்குப் புதிதல்ல. கடலில் மீன் பிடிப்பது என்பது அவருக்கு கை வந்த கலை, ஆனாலும் ஒரு நாள் இரவு முழுவதும் கடலில் வலையைப் போட்டு ஒரு மீன் கூட அகப்படாததுதான் அவர் வாழ்க்கையில் சந்தித்த முதல் தோல்வி. இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரோடு நடந்த பின்னும் இயேசுவை மறுதலித்தது தான், அவர் வாழ்க்கையில் கண்ட பெரிய தோல்வி! “இனி வாழ்க்கையில் ஒன்றும் இல்லை, எல்லாம் முடிந்தது” என்று சோர்ந்து போய் மனம் உடைந்த சூழ்நிலையில் இருந்த பேதுருவைத் தேடி மீண்டும் தேவனுடைய அழைப்பு வருகிறது. “இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? நீ என்னை நேசிக்கிறாயா?" என்ற தேவ சத்தம் பேதுருவின் வாழ்க்கையில் ஒரு புதிய ஆரம்பத்தை தந்தது, பேதுருவின் வாழ்க்கையில் நம்பிக்கை துளிர் விட்டது. மீண்டுமாய் தேவனுக்காக அவரை வைராக்கியமாய் ஓட வைத்து, திருச்சபையின் தூணாய் மாற்றி விட்டது.
இதை வாசிக்கிற அன்பு நண்பர்களே! இதே போல உங்களுடைய வாழ்க்கையிலும் சோர்ந்து போய் நம்பிக்கை இழந்த சூழ்நிலையில் மனம் தளர்ந்து வேதனையோடு இருக்கிறீர்களா? இயேசு உங்களை நேசிக்கிறார். உங்கள் வாழ்க்கையிலும் ஒரு புதிய ஆரம்பத்தை தர விரும்புகிறார். பேதுருவைப் போல தேவ சத்தத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம். நமது வாழ்க்கையும் சோர்ந்து போயிருக்கிற அநேகருக்கு ஆசீர்வாதமாக அமையும் என்பது நிச்சயம்.
- Mrs. ஞானசெல்வம் செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
நமது மாதாந்திர பத்திரிக்கைகளில் செய்தி எழுதுகின்ற ஒவ்வொருவரையும் ஆண்டவர் விசேஷித்த ஆவியினால் நிரப்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864