இன்றைய தியானம்(Tamil) 17.03.2025
இன்றைய தியானம்(Tamil) 17.03.2025
விடாப்பிடியாக
"...ரூத்தோ அவளை விடாமல் பற்றிக் கொண்டாள்" - ரூத் 1:14
ஒரு கூட்ட தவளைகள் தண்ணீரை நோக்கி வேகமாக ஓடின. போகும் பாதை எப்படி உள்ளது என்று கூட பார்க்கவில்லை. மூன்று தவளைகள் வழியில் உள்ள பெருங்குழியில் விழுந்து விட்டன. மற்ற தவளைகளோ பாதையை நோக்கிச் செல்லாமல் குழியின் அருகே வந்து நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன. விழுந்த வேகத்தில் அந்த மூன்று தவளைகளும் எப்படியாவது மேலே வந்து விட வேண்டுமென்று வேக வேகமாக மேலே தாவின. இதை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தவளைகளில் ஒன்று, நீங்கள் மேலே வரவே முடியாது. ஏன் வீணாக முயற்சிக்கிறீர்கள் என்றது. இதைக் கேட்டவுடன் அதில் ஒரு தவளை சோர்ந்து போய் ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டது. இரண்டு மட்டும் மேலே வர முயற்சித்தன. மேலேயிருந்த மற்ற தவளை கூறியது, "மழைக்காலம் வரும் அப்போது இந்தக் குழி மழை நீரால் நிரப்பப்படும். அப்போது நீங்கள் எளிதாக நீந்தி மேலே வந்து விடலாம். அதுவரை இங்கே இருங்கள்" என்றது. இதுதான் சிறந்த யோசனை என்று எண்ணி இரண்டாவது தவளையும் தாவுவதை நிறுத்தியது. ஆனால் ஒன்று மட்டும் விடாப்பிடியாக மேலே வர முயற்சித்தது. ஆனால் உடனிருந்த இரு தவளைகளும் நீயும் எங்களுடன் இரு. உனக்கு துணையாகத் தான் நாங்கள் இருக்கிறோமே என்றன. ஆனாலும் காது கேளாதது போல பெருமூச்சுடன் தாவித்தாவி மேலேயும் வந்துவிட்டது அந்த தவளை.
மோவாப் தேசத்திலே குடும்பமாய் வாழ்ந்தவர் எலிமெலேக்கு-நகோமி தம்பதியினர். இவர்களது இரண்டு குமாரர்களுக்கும் மோவாபிய ஸ்திரீகளில் பெண் கொண்டார்கள். அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத். பத்து வருஷம் சென்ற பின்பு, இவர்களுடைய கணவர்களும் இறந்துபோக, நகோமி தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள். இந்நிலையில் தான், ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டு கடந்து சென்றாள். ரூத்தோ அவளை விடாமல் பற்றிக் கொண்டாள். ரூத் நகோமியை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டதினால், ரூத் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து பூமியில் வருவதற்கு மூல காரணமாயிருந்தாள்.
இதை வாசிக்கின்ற அன்பானவர்களே! நாம் நம்முடைய வாழ்க்கையில் பல தீர்மானங்களை எடுத்து இருக்கலாம். ஒவ்வொரு வருடமும் தீர்மானம் எடுத்து, அதில் நாம் தோற்றுப் போனவர்களாக, தீர்மானத்தை நிறைவேற்ற முடியாதவர்களாக இருக்கலாம். குழிக்குள் விழுந்த தவளையை மற்ற தவளை ஏளனம் செய்தது போல, நம்மிடம் பிறர் உங்களால் தீர்மானத்தை கடைப்பிடிக்க முடியாது என்று விமர்சிக்கலாம். ஆனால் ரூத் காரியம் நம்மிடம் காணப்படட்டும். ரூத் தன் மாமியை விடாமல் பற்றிக் கொண்டது போல, தேவனை நாம் விடாமல் பற்றிக்கொள்வோம். நாம் அவரை விடாமல் முற்றிலுமாக பற்றிக் கொண்டிருப்போமானால் நம்முடைய காரியம் எதுவாக இருந்தாலும் நிச்சயம் வெற்றி பெறும். எந்த சூழ்நிலையிலும் நம்வாழ்வில் இயேசுவை விடாமல் பற்றிக்கொள்வோமா?
- Bro. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
அநேக வாலிப ஜெபக்குழுக்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864