Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 02.12.2024

இன்றைய தியானம்(Tamil) 02.12.2024

 

நேசிக்கிற கர்த்தர்

 

"…உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்” - சங்கீதம் 119:163

 

நான் ஒரு முறை தேவனுக்கு பிரியமில்லாத வழியில் சென்றதினிமித்தம் ஒரு குற்ற உணர்வு என்னை அழுத்தியது. நான் பாவி, நான் எப்படி பரிசுத்த வேதாகமத்தைத் தொட்டு வாசிப்பது என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. அதனால் மூன்று நாட்களாக வேதத்தை வாசிக்காமல், ஜெபம் செய்யாமல் இருந்துவிட்டேன். மறுநாள் நான் ஜெபஅறைக்குள் சென்று சும்மா அமர்ந்து விட்டு வருவோம் என சொல்லி சென்றேன். வேதத்தைக் கூட வாசிக்காமல், அமைதியாக உட்கார்ந்தேன். அப்போது ஒரு மெல்லிய சத்தத்தைக் கேட்டேன் " கணேசன் இன்னும் நான் உன்னை நேசிக்கிறேன்." நான் இது பிரம்மை என எண்ணிக் கொண்டிருந்தபோது, மீண்டும் "கணேசன் இன்னும் நான் உன்னை நேசிக்கிறேன்" என்ற சத்தத்தைக் கேட்டேன்.

 

ஆம், தேவன் நாம் பாவியாயிருக்கையில் நம்மை நேசித்து தம்முடைய ஒரே பேறான குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பினார். அதோடு மாத்திரமல்ல நம்மை பாவத்திலிருந்து மீட்க, பாவத்தினால் இழந்த பரலோக வாழ்வைப் பெற தம் ஜீவனையே கொடுத்தார். இயேசு கிறிஸ்துவும் “... பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்." (மத்தேயு 9 : 13). ஆதலால் இந்த உலகம் வெறுத்த ஆயக்காரர்கள் மற்றும் பாவிகளையும் நேசித்தார். அவர்களோடு போஜனம் செய்தார். இயேசு கிறிஸ்து பிறந்த செய்தியும் உலகத்தாரால் அற்பமாக எண்ணப்பட்ட மேய்ப்பர்களுக்கு தான் முதலில் அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு இயேசு பிறந்த நற்செய்தியை சொல்ல தூதர்களின் சேனையே இறங்கி வந்தது.        

 

பிரியமானவர்களே! தேவனின் அன்பை ருசித்த நாம், அன்பிற்காய் ஏங்கும் பலரின் உள்ளத்தில் கிறிஸ்து பிறக்க, சுவிசேஷத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த பாரத்தோடு இவ்வாண்டு 25,000 கிராமங்களுக்கு இயேசு பிறப்பின் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, முடிந்த அளவு ஆயிரக்கணக்கான கிராமங்களை சந்திக்க ஆண்டவர் கிருபை செய்தார். அவரால் மட்டுமே பாவத்தைக் கழுவ, பாவத்திலிருந்து மீட்பைக் கொடுக்க முடியும். இதை பலருக்கும் அறிவிப்பது நம் ஒவ்வொருவர் மேலும் விழுந்த கடமை! பலரால் வெறுத்து ஒதுக்கப்பட்டு, தனித்து விடப்பட்டவர்களையும் நேசிப்போம். அவர்களும் இந்த பண்டிகை காலங்களில் மகிழ்ந்திருக்க அன்பை பகிர்வோம். மேய்ப்பர்கள் பிள்ளையைக் கண்டு, அந்த சங்கதியைப் பிரசித்தப்படுத்தினார்கள். (லூக்கா 2: 17) அடுத்ததாக தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள். இன்று நாம் தேவனின் அன்பையும், சமாதானத்தையும் பெற்று துதித்து, மகிமைப்படுத்தி அதோடு இருந்து விடுகிறோம். பிரசித்தப்படுத்துவோம் என நம்பி தான் தம் அன்பை நாம் ருசிக்கும்படி செய்துள்ளார். மறவாமல் பிரசித்தப்படுத்துவோம், மறவாத தேவன் இம்மானுவேலராய் உடனிருப்பார்.

- Bro. டேவிட் கணேசன்

 

ஜெபக்குறிப்பு: 

இம்மாத ஊழியங்களுக்காக, ஊழியர்களின் சுகத்திற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)