இன்றைய தியானம்(Tamil) 02.11.2024 (Gospel Special)
இன்றைய தியானம்(Tamil) 02.11.2024 (Gospel Special)
ஊழியமில்லாத ஊழியக்காரன்
"சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ" - 1 கொரி. 9:16
2023 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை மையமாக வைத்து சுவிசேஷ ஊழியம் செய்தோம். அந்த சமயத்தில் எங்களுக்கு போதுமான கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடு இல்லாதிருந்தது. ஆகவே அருகில் உள்ள ஒரு பெரிய பட்டணத்தில் எங்களுக்கு தெரிந்த சபைகளிலுள்ள நபர்களை கைப்பிரதிகளுக்காக தொடர்பு கொண்டோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்தபடி கைப்பிரதிகளோ, புதிய ஏற்பாடுகளோ கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கான திருச்சபைகள் அப்பட்டணத்தில் இருந்தும் சுவிசேஷ ஊழியத்திற்கு அடிப்படை ஆதாரமான கைப்பிரதிகள், சுவிசேஷ புத்தகங்கள் இல்லாமலிருப்பது எவ்வளவு வேதனையான செய்தியாக இருக்கின்றது.
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பார்கள். இங்கு நான் குறிப்பிடுகிறது ஏதோ ஒரு பட்டணத்தில் உள்ள நிலவரம் என்பது மட்டுமல்ல; தமிழ்நாடு முழுவதும் இதே நிலைமைதான் காணப்படுகின்றது. கிராமங்களுக்கு சென்று சுவிசேஷ ஊழியம் செய்வதை இன்றைய திருச்சபைகள் சுத்தமாக மறந்து விட்டனர் என்று சொல்லலாம். ஏதோ அத்திப்பூத்தாற்போல் ஒரு சில சபைகள் மட்டும் கிராம ஊழியங்களை இன்றளவும் செய்து வருகிறார்கள். மற்றபடி அநேக சபைகள் சுவிசேஷ ஊழியத்தை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள் என்று நிச்சயமாக சொல்ல முடியும். இது பிற ஊழியங்களையோ, சபைகளையோ குறைத்து பேசுகிறோம் அல்லது குறைபட்டுக் கொள்கிறோம் என்றல்ல. இதுதான் நிதர்சனமான உண்மை.
சுவிசேஷ ஊழியத்தை நிறுத்திவிட்ட சபைகள் கிறிஸ்துவுக்குள் ஆரோக்கியமான வளர்ச்சியை பார்க்க முடியாது என லியோனார்டு ரேவன்ஹில் எழுதுகின்றார். "சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால் எனக்கு ஐயோ' என்று பிரதான அப்போஸ்தலன் பவுல் தன்னைக் குறைப்பட்டு கொள்கின்றார். ஆனால் இன்றைய ஊழியக்காரர்கள் சுவிசேஷம் அறிவிப்பதை தவிர்த்து, மற்ற எல்லா ஊழியங்களிலும் தங்களை பிரதானமாக காட்டுகின்றனர். உங்கள் எல்லாருடைய இரத்தப் பழிகளுக்கும் நான் நீங்கலாயிருக்கிறேன் என்று சொன்ன அப். பவுலின் வார்த்தைகளை நாம் இங்கே நினைவுகூர வேண்டும்.
கர்த்தராகிய இயேசுவின் பிரதான கட்டளையாகிய 'சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்' என்ற வார்த்தையை எல்லா சபைகளும் பொறுப்பெடுத்து கிராம ஊழியங்களை செய்ய வேண்டும் என கருத்தாக நாம் ஜெபிக்க வேண்டும். மற்றவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என நாம் ஜெபிக்கும் அதே தருணத்தில், சுவிசேஷ ஊழியத்தை மறந்து விட்ட சபைகளும், ஊழியர்களும் ஊழியஞ்செய்யும் படி எழும்ப வேண்டும் என கருத்தாக நாம் ஜெபிக்க வேண்டும். சுவிசேஷ ஊழியத்தை செய்யாதிருக்கும் ஊழியங்களுக்கும், சபைகளுக்கும் ஐயோ என வேதத்தில் எழுதப்பட்டுள்ளதை மறந்துவிடவே கூடாது. ஆண்டவர் நமக்கு உதவி செய்வாராக.
- Bro. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
25000 கிராமங்களை சந்திக்கும் திட்டத்தில் நாம் சந்திக்கும் சிறுவர்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864