Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 08.10.2024

இன்றைய தியானம்(Tamil) 08.10.2024

 

மாற்றத்தைக் கொண்டுவரும் அன்பு

 

"அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்" - 1 யோவான் 4:8

 

இராபர்ட் மொஃபட் என்னும் தேவ ஊழியர் ஆப்பிரிக்காவின் ஆட்டன்பர்ட் என்ற இடத்திற்கு மிஷனெரியாகச் சென்றார். ஆட்டன்பர்ட்டில், ஆப்பிரிக்கேனர் என்ற மிகப்பெரிய ரவுடி ஒருவன் இருந்தான். அவன் பல கொலைகளை செய்தவன், அரசாங்கத்திற்கு சவாலாக இருந்தான். அவனுடைய தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ஆயிரம் டாலர் பரிசு தரப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது.அரசாங்கத்தின் பரிசு தொகை அறிவிப்பால் பலர் தனியாகவும், குழுவாகவும் சென்றார்கள். ஆனால் ஆப்பிரிக்கேனரை கொலை செய்ய முடியாமல், சென்றவர்களில் பலர் மரித்தனர்.

 

இராபர்ட் மொஃபட் கிறிஸ்துவின் அன்பை எப்படியாவது ஆப்பிரிக்கேனருக்கு அறிவித்து அவனை கிறிஸ்துவண்டை வழிநடத்த திட்டமிட்டார். ஆப்பிரிக்கேனர் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள பிள்ளைகளில் 100 பேரை தெரிந்து கொண்டு, அவர்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தம் செய்தார். சொறியும், சிரங்கும், அசுத்தமாயும் இருக்கிற அந்த பிள்ளைகளை சுத்தப்படுத்தி, அழகுபடுத்தி அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் கொடுத்து வந்தார். இவருடைய செயல்களை உற்று நோக்கிய ஆப்பிரிக்கேனர் நம் இன பிள்ளைகளுக்கு இவர் பாராட்டும் அன்பு பெரியது என உணர்ந்தார். இவர் வணங்கும் தெய்வத்தை நானும் வணங்குவேன் என்று சொல்லி இயேசுவை ஏற்றுக் கொண்டார். யாராலும் பிடிக்க முடியாத அந்த ஆப்பிரிக்கேனருடைய மனமாற்றத்தை அறிந்த அரசாங்கம் அவருக்கு பொது மன்னிப்பை அருளியது.

 

மொஃபட்டின் ஆரம்ப ஊழியமே சிறு பிள்ளைகள் மத்தியில்தான். இயேசுவும், சீமோன் பேதுருவிடம் என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றுதான் கூறினார். சிறுமீனை வைத்து பெரிய மீனை பிடிப்பது போல் சிறுவர் ஊழியத்தின் மூலம் பெரிய மீனாகிய ஆப்பிரிக்கேனரை பிடித்தார் இராபர்ட் மொஃபட். நாமும் ஊழியத்தின் பாதையில் சிறுவர்களை மையமாக வைத்து செய்யும் போது, பெரிய பலனைக் காண்போம் என்பது அதிக நிச்சயம் அல்லவா?

 

எனக்கன்பானவர்களே, நாமும் இயேசுவின் அன்பை எவ்விதத்திலாவது உலகிற்கு எடுத்துச் சொல்வோம். நம் உள்ளம் தேவ அன்பினால் நிரப்பப்பட்டிருக்குமானால், மற்றவர்களுக்கு நாம் அதை கொடுக்க முடியும். அன்பினால் உலகத்தை ஜெயிக்கிறவர்களாக, அவருக்கு சாட்சியாக விளங்குவோம். தேவனின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம். அல்லேலூயா ஆமென்.

- Mr. செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு:

நம் டியூஷன் சென்டருக்கு வரும் பிள்ளைகள் கர்த்தரை அறிய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)