இன்றைய தியானம்(Tamil) 10.09.2024
இன்றைய தியானம்(Tamil) 10.09.2024
பிரகாசமடைந்த முகம்
"எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது; கர்த்தருடைய மகிமை உன் மேல் உதித்தது" - ஏசாயா 60:1
நம்முடைய முகம் பிரகாசமாய், அழகாய் இருக்க பல பொருட்களை உபயோகிக்கின்றோம். ஆனால் கர்த்தரால் வரும் பிரகாசத்தை பற்றி அறிந்தவர்கள் எத்தனை பேர்? கர்த்தருடைய மகிமை நம் மேல் உதிக்கவும் நாம் செல்லுகிற இடமெல்லாம் கர்த்தருக்காக பிரகாசிக்க வேண்டும் என்றும் தேவன் எதிர்பார்க்கிறார். தேவனுடைய மகிமைக்காக நாம் வாஞ்சித்து கதறும் போது அவருடைய மகிமைக்கொப்பான ஒரு மகிமையிலே மறுரூபமாக்கப்படுவோம். வேதத்திலே பிரகாசமடைந்த முகங்கள் யாரெல்லாம் என்று இன்று பார்ப்போம்.
1. மோசே 2. இயேசு கிறிஸ்து 3. ஸ்தேவான் மோசே தனித்து தேவனோடு செலவிட்ட நேரம் அவரது முகத்தை பிரகாசிக்கச் செய்தது. உம்முடைய மகிமையை எனக்கு காண்பித்தருளும் என்று மோசே ஜெபித்தார். அவர் 40 நாட்கள் கர்த்தரோடே இருந்து சீனாய் மலையிலிருந்து இறங்குகிற போது அவருடைய முகம் பிரகாசிப்பதை இஸ்ரவேல் புத்திரர் கண்டார்கள். இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் கூட்டிக்கொண்டு உயர்ந்த மலையின் மேல் ஏறினார். அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அவர் முகம் சூரியனைப் போல் பிரகாசித்தது. ஆம், தேவனுடைய மகிமை நம்மில் உதிக்கும் போது நம்முடைய முகமும் பிரகாசமடையும். அடுத்ததாக, ஸ்தேவான் பேசின ஞானத்தையும், ஆவியையும் எதிர்த்து நிற்க, அவனோடே தர்க்கம் பண்ண சுற்றியிருந்தவர்களால் கூடாமல் போயிற்று. எனவே அவருக்கு விரோதமாக பொய்சாட்சிகளை நிறுத்தி, ஆலோசனை சங்கத்தில் அவர் நிறுத்தப்பட்ட போது, அவர் முகம் தேவதூதன் முகம் போல் பிரகாசித்தது.
அன்பான தேவ பிள்ளைகளே! இந்த உலகத்தில் எழும்பி பிரகாசிக்கும்படி தேவன் நம்மை அழைத்திருக்கிறார். உலகத்திற்கு உப்பாய், ஒளியாய் இருக்கும்படிக்கே தேவன் நம்மை தெரிந்தெடுத்திருக்கிறார். நமது பிரகாசம் இருளைப் போக்கும். பாவசாபத்தில் கட்டப்பட்ட மனிதர்களின் இருதயத்தில் காணப்படும் இருளை போக்க நாம் சுவிசேஷம் என்னும் தீபத்தை ஏற்ற வேண்டும். மகிமையின் ஆவியானவர் நம்மை நிரப்பும் போது, நாம் நிச்சயமாகவே பிரகாசிப்போம். ஆண்டவர் சொல்லுகிறார், "இதோ இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடும், ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார். அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். உன் வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகளும் உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்" இந்த வாக்குத்தத்தம் நிச்சயம் உங்கள் வாழ்வில் நிறைவேறும்.
- Mrs. கிரேஸ் ஜீவமணி
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு பைபிள் அம்மா எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864