Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 29-11-2022

இன்றைய தியானம்(Tamil) 29-11-2022

 

சிறைப்படுத்து

 

“…தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்கு கீழ்படியச் சிறைபடுத்துகிறவர்களாயிருக்கிறோம்.” – 2. கொரிந்தியர் 10:5

 

இளைஞன் ஒருவன் அமைதியாக தியானம் செய்து இறைவனைக் காணும்படி காட்டிற்குச் சென்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தியானம் பண்ண ஆரம்பித்தான். கூட்டமாய் வாலிபப் பெண்கள் அருகிலுள்ள கிராமத்திற்கு நாட்டியம் பழக காட்டுப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த வாலிபனின் தியானம் தடைபட்டது. உடனே ஒரு துணியால் கண்களை கட்டிக் கொண்டான். தியானம் தொடர்ந்தது. மறுநாள் அதே நேரம் பெண்கள் கடந்து சென்றார்கள். அவர்களுடைய கால் சலங்கையின் ஒலி அவன் தியானத்தைத் தடுத்தது. உடனே காதுகளை துணியால் மூடிக்கொண்டான். அடுத்த நாள் அதேநேரம் இப்பொழுது அந்தப் பெண்கள் போய்க் கொண்டிருப்பார்கள் என்று மனதில் எண்ணம் வந்தது. மனதைக் கட்டுப்படுத்த அவன் போராடிக் கொண்டிருந்தான்.

 

வேதத்தில் “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்” (நீதிமொழிகள்4:23) என்று வாசிக்கிறோம். இங்கு இருதயம் என்று குறிப்பிடுவது நாம் பெற்றிருக்கிற சதையான, இரத்தத்தை சுத்திகரிக்கிற இருதயத்தைப் பற்றி பேசவில்லை. மனதில் உருவாகும் எண்ணங்களைக் குறித்து கவனமாயிருக்குபடி, அதைக் காத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறோம். நம்முடைய ஐம்புலன்கள் வழியாக (கண், காது, மூக்கு, வாய், உணர்ச்சி) தேவனுக்குப் பிரியமான காரியங்களை மாத்திரம் செய்வோம். தேவனுக்குப் பிரியமில்லாத பாவமான காரியங்களை உள்ளே அனுமதித்தால் அது பாவமான செயல்களாக வெளிப்படும். தவறான எண்ணங்கள் வருவதைத் தடுக்க முடியாது. ஆனால் அந்த எண்ணங்களை கட்டுப்படுத்தாமல், தடை செய்யாமலிருந்தால் அது மிகமிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு எழுதும் போது, தேவனை அறிகிற அறிவிற்கு விரோதமாக எழும்புகின்ற எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குள் சிறைப் படுத்துகிறவர்களாய் இருக்கிறோம் (2.கொரி.10:5) என்று எழுதுகின்றார். 

 

இதன் மூலம் வேதம் நமக்குத் தரும் ஆலோசனை என்ன? பாவ எண்ணங்களை கிறிஸ்துவுக்குள் சிறைப்படுத்த கற்றுக்கொள்ள வெண்டும். இதை வாசிக்கின்ற அன்பரே, பறவைகள் என் தலைமேல் பறப்பதை தடுக்க முடியாது. ஆனால் அவைகள் நம் தலையின் மேல் கூடுகட்டாமல் தடுக்க முடியும். உங்கள் இருதயம்(எண்ணம்) எப்படியிருக்கப் போகிறது? 

- L. அழகர்சாமி

 

ஜெபக்குறிப்பு:

நம்முடைய வளாகத்தில் பயிற்சியில் உள்ள புதிய ஊழியர்கள் தேவனுக்கென்று வைராக்கியமாக உருவாக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)