
இன்றைய தியானம்(Tamil) 03-12-2021
இன்றைய தியானம்(Tamil) 03-12-2021
விதவையின் வாஞ்சை
“...அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.” – லூக்கா 2:37
எல்லாவித மகிழ்ச்சியையும் இழந்துவிட்டேன். வயதும் ஆகிவிட்டது. இனி என்னால் என்ன செய்யமுடியும்? இனியும் ஆண்டவருக்காக எதையும் செய்யமுடியுமோ? என்று ஏக்கப்பெருமூச்சோடு இருக்கும் பெண்களின் நடுவே, இளமை தொலைந்து, நலம் குறைந்து, உடல் ஒடுங்கி, வாழ்வின் எல்லா பிடிப்புகளும் அகலும்போதும் ஆண்டவருக்கு சேவைசெய்ய முடியும் என்று சவாலிடுகிறார் ஏறக்குறைய 84 வயது நிரம்பிய அன்னாள். யார் இவர்? இயேசு பாலகனை முதன்முதலாக ஆலயத்திற்கு எடுத்துவரும்போது சரியாக அந்நேரத்திலே வந்து நின்று கர்த்தரைப் புகழ்ந்த ஒரு தீர்க்கதரிசி.
கிறிஸ்து பிறப்பிற்காக காத்திருந்து அவரைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்த அன்னாள் ஒரு ஜெபவீராங்கனை! 7 வருஷம் புருஷனுடனே வாழ்ந்து கைம்பெண்ணானவள். அவளது பிள்ளைகளைக் குறித்த விவரங்கள் எதுவும் வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. அன்னாள் அன்றுவரை செய்துகொண்டிருந்த காரியங்களை பரிசுத்த ஆவியானவர் ஒரே வசனத்தில் அழகாக எழுதி வைத்துள்ளார். முதலாவது தேவாலயத்தை விட்டு நீங்காத விதவை. வேலையோ பொறுப்புகளோ அதிகமில்லாததால் அக்கம்பக்கத்தவரின் வீட்டு காரியங்களை கேட்டு விமர்சிக்கும் விதவைகளின் நடுவே, அன்னாள் எங்கும் செல்லாமல் தேவாலயத்திலேயே இருந்தாள். என்ன ஒரு அழகான சாட்சி பாருங்கள்.
எனது பாட்டி, இராக்லாண்டு மிஷனெரி ஐயா சிவகாசியில் ஊழியம் செய்த காலத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள். கணவரான வடிவேல்முருகனிடம் அடிவாங்கினாலும் ஆலயத்திற்குச் செல்வதை நிறுத்தமாட்டார்கள். என்ன ஆனாலும் ஆலயத்திற்கு போக வேண்டும் என்று வாஞ்சிப்பார். அவர்களின் வாஞ்சை பிள்ளைகளின் பிள்ளைகளாகிய எங்களையும் பற்றிக்கொண்டது. இப்படி ஆலயத்தை நேசிக்கும் ஒரு சந்ததி உருவாக அவர்களின் பக்தியும் வாஞ்சையுமே காரணம்! இதை வாசிக்கும் நீங்கள் தேவாலயத்தையும் தேவ பிரசன்னத்தையும் வாஞ்சிக்கிறீர்களா?
வாலிப வயதிலும் நடுத்தர வயதிலும் கூட உபவாசிக்க யோசிக்கிற நமக்கு முன்மாதிரியாக 84 வயது விதவைத்தாய் இரவும் பகலும் உபவாசித்து ஜெபித்தார்கள் என்றும் தேவனை ஆராதித்துக்கொண்டே இருந்தார்கள் என்றும் பார்க்கிறோம். நாம் உண்மையாகவே தேவனை நேசிப்பவர்களாக இருந்தால் அழிந்து போகிற ஆத்துமாக்களுக்காக திறப்பிலே உபவாசத்துடன் நிற்க இன்றே தீர்மானம் எடுப்போம்.
அன்பானவர்களே! நாமும் அன்னாளைப் போல உத்தமமாய் தேவனை நேசிப்போம். வயதாகிவிட்டது என்று வீட்டிற்குள் முடங்கிவிடாமல் ஜெபித்துக்கொண்டேயிருப்போம். மேசியாவான இயேசுகிறிஸ்து மூலமே இரட்சிப்பு என்பதை பறைசாற்றுவோம். இப்படி வாழ தேவன் நமக்கு உதவிசெய்வாராக.
- Mrs. ஜெபா டேவிட்கணேசன்
ஜெபக்குறிப்பு:
சிறுவர் இல்ல பிள்ளைகளின் கல்லூரி கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது. இந்த மாதத்திற்குள் கட்டணம் கட்டி முடிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250