இன்றைய தியானம்(Tamil) 13.06.2025
இன்றைய தியானம்(Tamil) 13.06.2025
வீழ்ச்சிக்கு முன் பெருமை
"அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்,..." - யாக்கோபு 4:6
நம்மை படைத்து, நம்மோடு வாசம் செய்து கொண்டிருக்கும் தேவன் நமக்கு நல்ல தாலந்துகள், திறமைகள், நினைவாற்றல், கற்றுக்கொள்ளும் திறன் யாவையும் கிருபையாக தந்திருக்கிறார். நாம் இவைகளுக்காக நன்றி நிறைந்த இருதயத்துடன், தாழ்மையாக காணப்பட வேண்டுமென தேவன் விரும்புகிறார். வேதாகம கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவன் மிகவும் திறமைசாலியாகவும், வசனங்களை எளிதில் மனனம் செய்து, நன்கு பிரசங்கிக்கும் திறமை பெற்றவனாயிருந்தான். மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கூட இவனிடம் சில பிரசங்கக் குறிப்புகளை கேட்பார்கள். எனவே எப்பொழுதும், மிகுந்த பெருமையுடன் கர்வத்தோடு நடந்து கொள்வான். நன்றாகவும் படிப்பதால் தேர்வு பயமும் அவனுக்கு இல்லை. தனக்குத்தான் எல்லாம் தெரியும், என்று கற்றல் திறன் குறைப்பாடு உள்ளவர்களை கிண்டல் செய்வான். நான் தான் எல்லாவற்றிலும் முதன்மையானவன் என்று பெருமை கலந்த மிடுக்குடன் காணப்படுவான்.
இரண்டாம் ஆண்டு இறுதித்தேர்வு வந்தது. விடைத்தாளில் எழுதும்படி பேனாவை கையில் பிடித்தால் கை நடுங்கியது. எவ்வளவு முயற்சித்தும் தேர்வு எழுத முடியவில்லை. அவன் பயத்துடன் சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் பார்க்க, எல்லோரும் அதிர்ச்சியுற்றனர். தொடர்ந்து வந்த தேர்வுகளையும் எழுத முடியவில்லை. அவன் கவலையில் அழுதான். தனக்கு ஏன் இந்த நிலை என்று யோசித்துப் பார்த்தபோது தேவன் அவன் பெருமையை அவனுக்கு உணர்த்தினார். தன் தவறுகளை உணர்ந்தான். தன்னை முற்றிலுமாக தேவசமுகத்தில் தாழ்த்தி, கண்ணீருடன் ஜெபித்தான். "நான் ஒன்றுமில்லை, எல்லாமே நீர் கொடுத்தது. எனக்கு எல்லாவற்றையும் அருள்பவர் இயேசுவே நீர் தான்" என மனதுருகி அழுது, மன்னிப்புப் பெற்றான். அடுத்த முறை எல்லா தேர்வுகளையும் எழுதி கல்லூரி படிப்பை முடித்தான்.
ஆம், எனக்கன்பானவர்களே, மனத்தாழ்மை உடையவர்களுக்குத் தேவன் கிருபையை அளிக்கிறார். பெருமை உள்ளவர்களுக்கோ தேவன் எதிர்த்து நிற்கிறார். இதை உணர்ந்தவர்களாக நாம் நம்மிடம் காணப்படும் வீண் பெருமைகளை விட்டொழித்து தேவனிடமும், சகமனிதர்களிடமும் தாழ்மையுடன் நடந்து தேவனை மகிமைப்படுத்துவோமாக!
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:-
வட மாநில ஊழியர்கள் செய்யும் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864