Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 12.06.2025

இன்றைய தியானம்(Tamil) 12.06.2025

 

சாட்சி எப்படி?

 

"...நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்;..." - ஆதி. 24:40

 

பிரியமான தேவ மக்களே! சீனியர் பாஸ்டர் ஒருவர் தனது உதவி ஊழியக்காரரிடம், தம்பி! பக்கத்து கிராமத்திற்கு போய் மேரி என்ற சகோதரி வீட்டில் ஜெபம் நடத்தி விட்டு வா என்று சொல்லி அனுப்பினார். அந்த கிராமத்திற்கு சென்ற உதவி ஊழியக்காரருக்கோ மேரி சகோதரி யார் என்றே தெரியாது. அதனால் தண்ணீர் பிடிக்கும் குழாய் பக்கத்தில் நின்றார். தண்ணீர் பிடிக்கிற இடத்தில் ஒரே வார்த்தை சண்டையாக நடந்தது. சற்று நேரத்தில் அமைதியுண்டானதும் அந்த உதவி ஊழியக்காரர் தண்ணீர் பிடிக்க வந்த சகோதரி ஒருவரிடத்தில் மேரி சிஸ்டர் வீடு எது என்று கேட்டார். உடனே நீர் இங்கு வந்து எவ்வளவு நேரமாயிற்று என்று அந்த சகோதரி கேட்டார்கள். அந்த ஊழியக்காரர் சண்டை ஆரம்பித்த போதே வந்து விட்டேன் என்றதும், இவ்வளவு நேரம் சண்டை போட்டாளே அவள் தான் நீர் கேட்ட சண்டைக்காரி மேரி என்றார்கள். என்ன சாட்சி பாருங்கள்.  

 

ஆபிரகாமோடிருந்த ஊழியக்காரனான எலியேசர் தனது எஜமான் ஆபிரகாமை குறித்து இவ்வாறு சாட்சி சொல்கிறான். தேவன் எனது எஜமானை செல்வ சீமானாக மாற்றி, சகலவற்றிலும் ஆசீர்வதித்திருக்கிறார். எந்த சூழ்நிலையிலும் கர்த்தரை அறியாத கானானிய பெண்ணை என் மகனுக்கு திருமணம் செய்துவிடக்கூடாது. தேவபிள்ளைகளோடே தான் பிணைப்பை உண்டாக்கவேண்டும் என்பதில் ஆபிரகாம் கவனமாக இருந்ததை சாட்சியாக கூறினான். ஒரு வேளை பெண் பார்க்கும் படலம் தோல்வியானால் என்று எலியேசர் கேட்டதும், ஆபிரகாம் நான் சேவிக்கும் என் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி காரியத்தைப் வாய்க்கப் பண்ணுவார் என்றார்.   

 

தேவ மக்களே, நம்மை குறித்து நம்மை சூழ்ந்திருக்கும் மக்கள் எப்படிப்பட்ட சாட்சிகளை சொல்கிறார்கள்? அந்த சண்டைக்காரி மேரி என்றா? சாந்தசொரூபி மேரி என்றா? நமது ஜெபவாழ்க்கை, வேத வாசிப்பு, தேவனுக்கு கீழ்ப்படிந்து பொல்லாப்புக்கு விலகுதல் போன்றவற்றை கவனித்து சாட்சி சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் இயேசு இல்லாத வாழ்க்கை நான் வாழ்ந்த போது என்னை குறித்த சாட்சி தாறுமாறாக இருந்தது. ஆனால் இயேசு என் வாழ்க்கையில் வந்து விட்ட பின்பு என்னைப் பார்த்து என் உறவினர் ஒருவர் சொன்னது, "இயேசு சாமி உங்களையும், உங்கள் ஜீவியத்தையும் மாற்றிவிட்டார்" என்று. என்னிடம் காணப்பட்ட மாற்றத்தை பார்த்து அவர் அவ்வாறு கூறினார். எலியேசர் தன் எஜமான் ஆபிரகாமை குறித்து கொடுத்த சாட்சி போல உங்கள் சாட்சி உண்டா? அல்லது தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடித்த சகோதரி மேரியைக் குறித்து சொன்ன சாட்சியைப் போல இருக்கிறதா? சிந்திப்போம். நம்மை குறித்து பிறர் சொல்லும் நற்சாட்சி மிகவும் அவசியம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக! ஆமென்.

- Mrs. எப்சிபா இம்மானுவேல்

 

ஜெபக்குறிப்பு:-

நம்மோடு இணைந்துள்ள வட மாநில ஊழியர்களின் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)