இன்றைய தியானம்(Tamil) 10.06.2025
இன்றைய தியானம்(Tamil) 10.06.2025
தீமையிலும் நன்மை
"யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை;... தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்" - ரோமர் 10:12
ஒரு கிராமத்தில் வயலில் சில விவசாயிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. சிறிது நேரத்தில் மின்னலுடன் இடி இடித்தது. இடியின் பயங்கர சத்தத்தைக் கேட்டு பயந்து போன அந்த விவசாயிகள் அருகிலிருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தினுள் ஓடி ஒளிந்து கொண்டனர். வெகுநேரமாகியும் மழை விடாது பெய்துகொண்டேயிருந்தது. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவர், நம்மில் ஒரு மகாபாவி இருக்கிறான், அவனைக் குறி வைத்துத் தான் கடவுள் இடியையும் மின்னலையும் வரவழைத்திருக்கிறார். எனவே அந்த ஒரு பாவியை வெளியே அனுப்பிவிட்டால், மற்றவர்களெல்லாரும் பிழைத்துக் கொள்ளலாம், என்று சொன்னார்.
யாரென்று முடிவு தெரிய அனைவரும் தொப்பியை வெளியே மழையில் நீட்டினர். அப்பொழுது பயங்கர இடி முழக்கத்துடன் மின்னல் ஒன்று ஒரு விவசாயின் தொப்பியில் படவே, அந்த தொப்பி எரிந்து சாம்பலாகியது. உடனே இவன் தான் அந்த பாவியென்று முடிவு செய்து அந்த நபரைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டார்கள். அந்த விவசாயியோ அழுது கொண்டு மழையில் நனைந்தபடியே ஓடினார். அப்பொழுது அந்த மண்டபத்தின் மீது இடி விழுந்ததில் அந்த மண்டபமே தரைமட்டமாகியது. தேவன் அந்த விவசாயி ன் மூலமாகத்தான் மற்றவர்களைப் பாதுகாத்தார். ஆனால் அது தெரியாமல் ஒருவனை நியாயந்தீர்த்து, கடைசியில் அவர்களே அழிக்கப்பட்டார்கள். அவர்கள் செய்த தீமை அவருக்கு நன்மையாக முடிந்தது.
அதைப் போலவே வேதத்திலும் யோசேப்பின் சகோதரர்கள், அவனை குழியில் தள்ளி, பின்பு அவரை அடிமையாக விற்றுப் போட்டார்கள். ஆனால் யோசேப்பு பல பாடுகளுக்குப் பின்பு முழு எகிப்து தேசத்திற்கும் அதிகாரியாக உயர்த்தப்பட்டார். பின்நாட்களில் அவன் சகோதரர்கள் யோசேப்பைப் பார்க்க வரும் போது யோசேப்பு அவர்களிடம் "நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவன் அதை நன்மையாக முடியப்பண்ணினார்" என்று சொல்லி அவர்களை ஏற்றுக்கொண்டார்.
அருமையான சகோதர, சகோதரிகளே! நீங்களும் மற்றவர்களால் அற்பமாக எண்ணப்பட்டு புறக்கணிக்கப்படுகிறீர்களா? நீ பிறந்தது முதல் நம் குடும்பத்தில் ஆசீர்வாதமில்லை என்று உங்கள் பெற்றோர் கூறுகிறார்களா? நீ காலெடுத்து வைத்ததிலிருந்து குடும்பத்தில் தரித்திரம் என்று புகுந்த வீட்டிலுள்ளவர்கள் சொல்லுகிறார்களா? கவலைப்படாதீர்கள். இப்போது தீமையாக தோன்றுகிற அனைத்தையும் தேவன் உங்கள் வாழ்வில் நன்மையாய் முடியப்பண்ணுவார்.
- Mrs. அனிதா அழகர்சாமி
ஜெபக்குறிப்பு:-
தெபோராள்களின் சுகத்திற்காக, பிரயாண பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864