இன்றைய தியானம்(Tamil) 07.02.2025
இன்றைய தியானம்(Tamil) 07.02.2025
நரிகள்
"திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும், சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்;..." - உன்னதப்பாட்டு 2:15
குழிநரிகளும், சிறுநரிகளும் திராட்சைத் தோட்டத்திற்குள் புகுந்து பூக்களையும், பிஞ்சுகளையும் அழித்துவிடும். இவைகள் திராட்சை கனிகளின் விளைச்சலை முற்றிலும் கெடுத்துவிடும். ஒவ்வொரு விசுவாசியின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், சபை ஒவ்வொன்றும் ஒரு திராட்சைத் தோட்டம் தான். இதற்கு சொந்தக்காரர் இயேசு கிறிஸ்து. அவர் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் அவருக்கேற்ற கனிகளைக் கொடுக்கும்படி எதிர்பார்க்கிறார். தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையிலோ, குடும்பத்திலோ, சபையிலோ காணப்படும் சிறு சிறு தவறுகள், பிழைகள், பெருமைகள், பொறாமைகள், கோபங்கள், சொற்ப மதியீனங்கள் போன்ற சிறுநரிகள் பெரிய பிரச்சனைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி விடும். தேவனோடு உள்ள உறவையும் முறித்து விடுகிறது. பூவும் பிஞ்சுமாயிருந்த ஆவிக்குரிய வாழ்க்கையில் கனி உண்டாகாமல் போய்விடுகிறது. கனி தராத வாழ்க்கை கிறிஸ்தவ சமுதாயத்தையே கெடுத்து சாட்சியை அழித்து விடுகிறது.
சபைகளிலும், ஊழிய நிறுவனங்களிலும் பிரிவினைகள், இடறல்கள், சண்டைகளை உண்டாக்க சாத்தான் பயன்படுத்தம் நரிகளாக விசுவாசிகள் செயல்படக்கூடாது. இதனால் ஆத்தும அறுவடையும், சபை வளர்ச்சியும் பாதிக்கப்படும். நரிகள் தந்திரமுள்ள, திருடுகின்ற, கீழ்ப்படியாத சுபாவம் உடையவையாதலால் அவற்றைப் பழக்க முடியாது. அவை பிற உயிர்களைக் கொன்று உண்பவை. ஏரோது ராஜாவிடம் திருடுதல் (சகோதரன் மனைவியை), கீழ்ப்படியாமை (யோவான் ஸ்நானனின் அறிவுரைக்கு) கொலை பாதகங்கள் ஆகிய சுபாவங்கள் இருந்தன. எனவே தான் இயேசு அவனை நரி என்று குறிப்பிட்டார். இத்தகைய நரியின் சுபாவங்களோடு பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது. "தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகன் தான்" (1யோவான் 3:15).
"தூங்குபவன் தொடைதன்னில் கயிறு ஒன்று திரித்திட தூங்காது திரியும் நரிக்கூட்டம்" என்பது ஒரு தமிழ்ப் பாடலின் வரிகள். எனவே பிரியமானவர்களே, நம் கனித்தரும் வாழ்வைக் கெடுக்கும் சிறுநரிகளையும், பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்பதைத் தடுக்கும் நரிகளையும் இனம் கண்டறிந்து, பிடிக்க வேண்டும். இதற்கு வேதம் காட்டும் ஒரே வழி இடைவிடாமல் ஜெபிப்பது, விழித்திருந்து ஜெபிப்பது என்பதே. கீழ்ப்படிவோமா? கர்த்தர் கிருபை பாராட்டுவாராக!
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
ஆமென் வில்லேஜ் டிவி சாட்டிலைட் டிவியாக மாற்றப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864