Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 31.10.2024

இன்றைய தியானம்(Tamil) 31.10.2024

 

எதை நோக்கிப் பயணிக்கிறாய்?

 

"…இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்" - எபிரெயர் 12:1

 

அந்த இரண்டு வாலிபர்களின் வாழ்க்கை சிறுவயதில் மிகவும் இனிமையாக இருந்தது. வாலிப வயதான போது அவர்களுக்குள் வெறுமை குடிகொண்டது. வாலிபத்தின் வெறுமையை வெறுப்பாய் பார்த்து, தனிமையை விரும்பி தற்கொலைக்கு நேரே செல்லும்போது அவர்களுக்கு சரியான நேரத்தில், சரியான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அது என்னவென்றால் அதுதான் நற்செய்தி, அதாவது “இயேசு உன்னை நேசிக்கிறார்” என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு இயேசுவை நோக்கிப் பார்த்ததால் சரியான பாதையில் நடந்தனர். ஆனால் ஒரு வாலிபன் மட்டும் திரும்பவும் உலக சிற்றின்பங்களுக்கு தன்னை விற்றுப்போட்டான். மிகவும் துன்மார்க்கமாய் வாழ்ந்தான். இருவருக்கும் ஒரே வாய்ப்புதான் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒரு வாலிபன் தன்னை நோக்கி பார்த்த இயேசுவை விட்டுத் தூரம் சென்று சீர்கேடான வாழ்க்கைக்குள்ளானான்.

 

வேதாகமத்தில் ஒரு தகப்பனுக்கு இரண்டு குமாரர்கள் மூத்தவன், இளையவன். இளையவன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, தகப்பனிடம் உள்ள தனக்கு சொந்தமான ஆஸ்திகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, தூர தேசத்திற்கு போய் மிகவும் துன்மார்க்கமாய் ஜீவனம் செய்து, தன்னுடைய ஆஸ்திகள் எல்லாவற்றையும் அழித்துப் போட்டான். பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாய் இருந்தான். ஒருவனும் அதை அவனுக்கு கொடுக்கவில்லை. புத்தி தெளிந்தபோது இளைய குமாரன் தகப்பனை நோக்கி, தான் செய்த எல்லா பாவங்களையும், அறிக்கை செய்ததுமின்றி இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். தகப்பனோ தன்னை நோக்கி வந்த தன்னுடைய மகனை ஏற்றுக் கொண்டார். 

 

இதை வாசிக்கின்ற தேவ ஜனமே! வாலிபம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவன் கொடுத்த மிக அற்புதமான பரிசு. வாழ்க்கை என்பது ஒரு பூந்தோட்டம். அந்த தோட்டத்தில் வாசனையை கொடுக்க வேண்டும் என்றால் இயேசுவானவர் நம் உள்ளத்தில் வர வேண்டும். நாம் எப்படிப்பட்ட பாவம் செய்திருந்தாலும் இதை வாசிக்கின்ற இந்த நேரத்தில் கூட, அவரை நோக்கிப் பார்த்து பிரகாசம் அடைவோம். அவரே நம்முடைய வாழ்க்கையை பிரகாசிக்க செய்கின்றவர். “கண்டதே காட்சி - கொண்டதே கோலம்” என்று வாழ்ந்து விடாமல் கொடுக்கப்பட்ட காலங்களில் அவரை நோக்கிப் பார்த்து, நம்முடைய ஓட்டத்தை ஜெயமாய் ஓடி முடிப்போம்.

- Sis. J.P.. ஹெப்சிபா

 

ஜெபக்குறிப்பு: 

மோட்சப்பயணம் மாதஇதழை வாசிக்கும் நபர்கள் தேவனை அறிகிற அறிவில் வளர ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)