இன்றைய தியானம்(Tamil) 30.10.2024
இன்றைய தியானம்(Tamil) 30.10.2024
நாயின் குணம்
"நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்" - நீதிமொழிகள் 26:11
நாய் நன்றியுள்ளது என்பது பொதுவான கருத்து. ஆனால் பரிசுத்த வேதாகமம் நாம் நாயைப் போல சுபாவத்தில் இருக்க வேண்டாம் என்று சொல்லுகிறது. ஏனென்றால் நாயானது தான் கக்கினதைத் தின்னும். அதுபோல கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக் கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும் என்று 2பேதுரு 2:20 ல் வேதம் சொல்லுகிறது.
எனக்கு ஒரு சகோதரனைத் தெரியும். அவர் தன் சிறுவயதிலிருந்தே ஆண்டவரை அதிகமாகத் தேடினவர். ஜெபம், வேதவாசிப்பு, ஆலயத்திற்கு செல்லுதல் போன்ற கர்த்தரைச் சேவிக்கின்ற காரியங்களிலெல்லாம் ஆர்வத்துடன் செயல்பட்டார். தேவன் அவருக்கு நல்ல தாலந்துகளையும் கொடுத்திருந்தார். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர் தன் நண்பர்களோடு சேர்ந்து உலக சிற்றின்பங்களை அனுபவித்தார். ஜெபம், வேதவாசிப்பு குறைந்து போனது. ஆலயத்திற்குச் செல்லவில்லை. பரிசுத்த ஜீவியம் கறைபட்டது. மனதில் சமாதானம் இல்லை. துன்மார்க்கனாய் மாறிவிட்டார். தன் தகப்பனை தலையில் அடித்ததில் அவர் மரித்துப்போனார். பின்பு இவரும் மனசாட்சி குத்துண்டவராய் மனநிலை பாதிக்கப்பட்டு மரித்தார்.
பரிசுத்த வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து யூதாசை பன்னிரெண்டு சீஷர்களில் ஒருவனாக ஏற்படுத்தினார். அவனைக் கொண்டு ஜனங்களிடத்தில் பிசாசுகளைத் துரத்தி, வியாதிகளையும் குணப்படுத்தினார். ஆனால் அவனோ பொருளாசையில் சிக்கி, தன் வாழ்வில் அற்புதங்களை செய்த அந்த இயேசுவுக்கே துரோகம் செய்து அவரைக் காட்டி கொடுத்தான். முடிவில் அவனுடைய நிலைமை மிகவும் பரிதாபமாக அதாவது நான்று கொண்டு செத்தான்.
இதை வாசிக்கிற அருமையான தேவ ஜனமே, இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய தன் விலையேறப்பெற்ற இரத்தத்தால் நம்மை உலகத்தின் அசுத்தங்களுக்கு நீக்கி, கிருபையாய் இரட்சித்திருக்கிறார். நாம் நன்றி நிறைந்த இருதயத்தோடு, அந்த கிருபையை காத்தும் நடக்க வேண்டும். அதை விட்டு யூதாசைப் போல உலகப்பிரகாரமான ஆசைகளுக்காக ஆண்டவரை விட்டுப் பின்வாங்குகிற இருதயம் நமக்கு வேண்டாம். நாய் தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவது போல, நாமும் "இது அசுத்தம், ஆண்டவர் விரும்பாதது" என்று தெரிந்தும், அதையே தொடர்ந்து செய்தால் நம் நிலையும் மிகவும் பரிதாபமாகிவிடும். எனவே எனக்கு அன்பான தேவ ஜனமே, கவனமாயிருப்போம்.
- Bro. சிமியோன்
ஜெபக்குறிப்பு:
மோட்சப்பயணம் பத்திரிக்கை ஊழியத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864