Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 29.10.2024

இன்றைய தியானம்(Tamil) 29.10.2024

 

இருதயபூர்வமாக

 

"எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்" - மத்தேயு 6:12

 

கொல்கொதா மலையில் திரண்டிருந்த மக்கள் கூட்டம்; அவர்களுடன் ரோம போர்ச் சேவகர், சீஷர், எருசலேம் நகரத்தார் என அனைவரும் ஒரு கணம் திடுக்கிட்டு போக காரணம், சிலுவையில் அறையப்பட்ட இயேசு தன் வாயை திறந்து மொழிந்த முதல் வார்த்தை தான்அது. அது ஒரு ஜெபம் போலவே இருந்தது. “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்".

 

இந்த மாட்சிமையான மன்னிப்பை யாருக்கு பரிந்துரைத்தார்? அவரை இராமுழுதும் வாரினால் அடித்து, முகத்தில் துப்பி, பரியாசம் பண்ணி, முள் கீரிடம் சூட்டி, “சிலுவையில் அறையும்” என்று கூச்சலிட்டு, இறுதியாக அவர் தம் கை, கால்களில் ஆணிகள் கடாவி, ஏளனம் செய்து கொண்டிருந்த அனைவரையும் பார்த்தே பிதாவிடம் மன்னிப்பு வேண்டினார். தொடர்ந்து அவர் சொன்னதாவது, “தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்” என்றார். இது மாட்சிமை பொருந்திய மன்னிப்பு; அவருடைய பேரன்பின் வெளிப்பாடு; அவர்தம் சீஷர்க்கு போதித்த வண்ணமே (மத்தேயு 5:44 )வாழ்ந்தார் என்பதற்கு சான்றாக விளங்குகிறது. 

 

மனப்பூர்வமாய் அவர்களை சிநேகித்த காரணத்தினாலே மன்னிக்க வேண்டுதல் செய்துள்ளார். அத்தருணத்தில் அவர் முகத்தில் கோபம், கசப்பு, வெறுப்பு, எரிச்சல் ஆகிய உணர்வுகள் வெளிப்படவில்லை. தம் சீஷருக்கு ஜெபிக்கும் முறையை கற்பித்த போதும் கூட “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்" என்று சொல்லிக் கொடுத்ததின் வாயிலாக நாம் பிறருக்கு மன்னித்தால் மட்டுமே நம் பாவங்கள் நமக்கு மன்னிக்கப்படும் என்ற மாறாத விதியை ஊழிய நாட்களிலும் கற்றுக்கொடுத்தார்.

 

அன்பார்ந்த வாசகரே! இருதயக்கடினமும், வைராக்கியமும் பிறரை மன்னிக்க பெரும் தடையை உண்டு பண்ணும். மனித மனம் வாயளவில் மட்டுமே மன்னிக்கும்; உள்ளத்தில் விரோதம் வைத்திருக்கக் கூடியது. இது மன்னித்தல் ஆகாது. இயேசு நம் பாவங்களை மனதார மன்னிப்பது மட்டுமல்ல; அவற்றை எல்லாம் தம் முதுகுக்கு பின்னாக எறிந்து விடுகிறார் என்பதை (ஏசா 38 :17) ன் வழியாய் அறியலாம். மனிதர்களாகிய நாம் பெயரளவில் மன்னித்து, நினைவில் எப்போதும் வைத்து அவர்களைக் குற்றப்படுத்துவது மன்னிப்பு ஆகாது என அறியக்கடவோம். இருதயப்பூர்வமாக மற்றவர்களை மன்னிப்போம். நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் தன் இளம் வயதில் ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்ததை நினைவு கூர்ந்து, ஆராதனைக்குப் பின் போதகரிடம் மனங்கசந்து அழுது, எனக்கு மன்னிப்பு உண்டா? என்றார். போதகர் சொன்னார். நிச்சயம் உண்டு. அன்பின் இயேசு "உங்கள் இளவயதின் பாவத்தை இப்பொழுதே மன்னித்து தேவ சமாதானம் உங்கள் உள்ளத்தில் நிறைந்திட செய்வார்" என்றார். அன்பு வாசகரே! ஒரு நிமிடம் நமக்கு தீமை செய்தவரை நினைவில் கொண்டு வந்து "பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்று கண்ணீரோடு வேண்டுவோமா? ஆவியானவர் தாமே உங்களோடு இடைபட்டு நம்முடைய அக்கிரமமும், பாவங்களும் மன்னிக்கப்பட நம்மோடு இணைந்து வேண்டுதல் செய்வது நிச்சயம். பிறர் தப்பிதம் மன்னிப்போம்! நம் தப்பிதங்களை அவர் மன்னிப்பார்! ஆமென்!

- Mrs. எமீமா சௌந்தர்ராஜன்

 

ஜெபக்குறிப்பு:

ஆமென் வில்லேஜ் டிவி மூலம் சந்திக்கப்படும் நபர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864


Comment As:

Comment (0)