ஊழியங்கள்

சகோதரர் உரை

தினதியானம்

உங்கள் சகோதரனிடமிருந்து…

கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.  கடந்த மாத ஊழியத்தில் தேவனுடைய ஆச்சர்யமான கிருபை எங்களை அளவில்லாமல் நடத்தியது.  கிருஷ்ணகிரி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 34 கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கவும் 13 கிராமங்களில் திரைப்பட ஊழியம் செய்யவும் தேவன் கிருபை செய்தார்.  ஒரு சில கிராமங்களில் ஊழியத்திற்கு எதிர்ப்புகள் இருந்தது.  மற்ற எல்லா கிராமங்களிலும் சுவிசேஷத்திற்கு திறந்த வாசல் காணப்பட்டது.  ஏப்ரல் மாத ஊழியத்தில் அநேக புதிய கிராமங்களில் சிறுவர் ஊழியம் செய்தோம்.  பிள்ளைகள் அப்பங் கேட்கிறார்கள், அவர்களுக்கு கொடுப்பாரில்லை என்ற வசனத்தின்படி சிறுபிள்ளைகள் இன்றைக்கும் வேத வசனத்தில் ஆவலாயிருக்கிறார்கள் என்பதை கிராம ஊழியத்தில் கண்கூடாக நாம் காண முடிகிறது.

பல வருடத்திற்கு முன்பு அமெரிக்க நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது.  அந்நாட்களில் யுத்தத்திற்குப் பின்பு மிக கொடிதான ஆட்கொல்லிநோய் ஒன்று அமெரிக்கா முழுவதும் தீவிரமாய் பரவியது.  அதில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போயினர்.  இச்சமயத்தில் நான்கு பிள்ளைகளுடன் வசித்து வந்த ஒரு குடும்பத்திலும் கொள்ளைநோய் பற்றிப் பிடிக்கவே வரிசையாக மூன்று பேர் நோயினால் மரித்தார்கள்.  இறுதியில் தாயாரும், மூன்று வயது மகளும் மீதியிருந்தனர்.  ஒரு கட்டத்தில் அத்தாயாரும் நோயினால் பாதிக்கப்பட்டு, தன் சிறு மகளை மடியில் வைத்தவாறே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள்.  “நீங்களும் மரித்துவிட்டால் நான் என்ன செய்வேன்? எனக்கு யார் இருக்கிறார்கள்?” என்று பரிதாப குரலில் கேட்டது பிள்ளை.  “இயேசு வந்து உன்னை அழைத்துச் செல்வார்” என ஒரே வரியில் பதிலை கூறி தாயும் மரித்துப் போனார்கள்.  அருகிலிருந்த அனைவரும் ஒன்று சேர்ந்து மரித்த அத்தாயை அடக்கம் செய்தார்கள்.  அப்பிள்ளையோ தாயின் கல்லறையை விட்டு வராமல் அங்கேயே படுத்துக்கிடந்தாள்.  ஒரு நாளைக்குப் பின்பு அக்கல்லறை வழியே சென்ற ஒரு பெரியவர் கல்லறையில் சிறுபிள்ளை படுத்திருப்பதை பார்த்து, “ஏன் நீ இங்கே இருக்கிறாய்?” எனக் கேட்டார்.  “எங்க அம்மா சாகும்போது, “இயேசு வந்து உன்னை அழைத்துச் செல்வார்” என என்னிடம் சொல்லி மரித்தார்கள்.  நீங்கதான் அந்த இயேசுவா?” எனக் கேட்டாள்.  நிலைமையை புரிந்து கொண்ட பெரியவர், கண்ணீர் மல்க, அவளை அணைத்துக்கொண்டு, “ஆம், நான்தான் இயேசு. என்னுடன் வா.” என அழைத்தார்.  “ஏன் இவ்வளவு தாமதமாக வந்தீர்கள்? நீங்கள் இன்னும் தாமதித்திருந்தால் நானும் செத்துப் போயிருப்பேனே” என்றாளாம் அப்பிள்ளை. இந்தப் பதில் அப்பெரியவருடைய இருதயத்தை சுக்கு நூறாக உடைத்தது.

இதையேதான் நம் தேசத்தின் சிறுவர்களும் கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.  இன்றைக்கு பிசாசு மனிதர்களை மிருகத்தை விட கேவலமாய் பயன்படுத்தி இச்சையினால் ஒரு வயது பிள்ளை தொடங்கி எல்லா தரப்பு சிறுமியரும் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.  சிறுவயதிலேயே பாவத்திற்குள் கட்டாயப்படுத்தி தள்ளப்படுகிற சிறுவர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு.  இவர்களுக்கெல்லாம் வேத வசனமாகிய அப்பத்தைக் கொடுத்து இயேசுவண்டை வழிநடத்த அருமையானதொரு வாய்ப்பு இக்கோடை விடுமுறை நாட்கள் ஆகும்.  விடுமுறை நாட்களில் உங்கள் பிள்ளைகளை VBS வகுப்புகளுக்கு அனுப்புங்கள்.  பெற்றோர்களாகிய நீங்களும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கிராமத்தில் சிறுவர் ஊழியம் செய்யலாம்.  கடந்த மாதம் 21ம் தேதி நம் தலைமை அலுவலக வளாகத்தில் வைத்து VBS ஆசிரியர் பயிற்சி நடத்தினோம்.  இதில் 223 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.  “பரிசுத்தமாயிரு” என்ற தலைப்பில் நம் ஊழியத்தின் மூலம் இவ்வருடம் VBS புத்தகங்கள் நேர்த்தியாய் வந்துள்ளன.  பல மாவட்டங்களில் ஒரு கிராமத்தில் VBS வகுப்புகள் நடத்த ரூ.3000/- வரை தேவைப்படுகிறது.  சிறுவர் ஊழியத்திற்கான உங்கள் உதாரத்துவமான காணிக்கையை கொடுத்து உதவி செய்யுங்கள்.

மே மாதமே பெற்றோர் பிள்ளைகளோடு அதிக நேரம் செலவிடும் மாதம்.  ஆகவே இம்மாத இதழை பெற்றோர் சிறப்பிதழாக வெளியிடுவதால் மிக மகிழ்ச்சியடைகிறோம். இப்பத்திரிக்கை உங்கள் கைகளில் கிடைக்கும் சமயத்தில் நமது வாலிபர் ஜெப முகாம் ஆசீர்வாதமாய் நடந்து முடிந்திருக்கும்.  முகாம் பற்றிய செய்தியினை வரும் இதழில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.  இம்மாதம் 2ம் தேதி, முகாமில் ஊழியத்திற்கென ஒப்புக்கொடுத்தவர்களுக்காக ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்த உள்ளோம்.  மூன்றாம் தேதி தொடங்கி இம்மாதம் முழுவதும் VBS வகுப்புகள் மற்றும் கிறிஸ்துவின் போர்ச்சேவகர் முகாம் ஊழியம் மூலம் எல்லா மாவட்டங்களிலும் சுவிசேஷம் அறிவிக்க திட்டமிட்டுள்ளோம்.  இவ்வூழியத்திற்கென பெரும் பணத்தேவைகள் எங்களுக்கு சவாலாக உள்ளன.  தேவனுடைய ஒத்தாசை எங்களுக்கு கிடைக்கவும், உதவி செய்கிற அநேக மக்களை தேவன் எழுப்பவும் ஜெபியுங்கள்.  போர்ச்சேவகர் முகாம் மூலம் ஒரு குழுவானது ஓரிடத்தில் தங்கி ஊழியம் செய்வதற்கு குறைந்தபட்சம் ரூ.5000 முதல் ரூ.10,000 வரை தேவைப்படுகிறது.  ஜெபியுங்கள்.  கைப்பிரதிகள், புதிய ஏற்பாடு மற்றும் சுவிசேஷப் பிரதிகள் தடையின்றி கிடைக்கப் பெற ஜெபியுங்கள்.  எங்களுடன் ஊழியத்தில் இணைந்து நிற்கும் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் நம் சர்வ வல்லமையுள்ள தேவன் பரிபூரணமுண்டாக, உங்களை ஆசீர்வதிப்பாராக!

தேவகிருபை நம் அனைவரோடும் இருப்பதாக! ஆமென்!

இப்படிக்கு,

P. ஜேக்கப் சங்கர்

Read more

எதிர்வரும் நிகழ்வுகள்

No records found.

கிராம மிஷனரி இயக்கத்திற்கு வரவேற்கிறோம்

 

கிராம மிஷனெரி இயக்கம் 1996ம் ஆண்டு K. டேவிட் கணேசன் அவர்களால் தொடங்கப்பட்டது. இவர் இயேசுகிறிஸ்துவை தரிசித்து அவரின் அழுகுரலைக் கேட்டு ஆத்துமபாரம் பெற்று ஊழியம் செய்ய ஆரம்பித்தார். பின்பு இத்தகைய பாரமுள்ளவர்கள் இணைந்து சபை பாகுபாடற்ற முறையில் குழு ஊழியமாக இயங்கி வருகிறது. தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

எமது தரிசனம்

எனது ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்ற வசனத்தின் படி கிராமங்களிலுள்ள சிறுவர் மற்றும் வாலிபர்களை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தி அவர்களின் மூலம் கிராமங்களை சுவிசேஷமயமாக்குதல்.

சந்திக்கப்படும் சிறுவர்கள் மற்றும் வாலிபர்களை நாளைய தலைவர்களாகவும், ஊழியர்களாகவும் உருவாக்குதல்.

ஒவ்வொரு கிறிஸ்தவர்களையும் ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களாக மாற்றுதல்.

எங்கள் அமைப்பு பற்றி மேலும் தெரிந்து கொள்ள

இங்கே கிளிக் செய்யவும்