Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 28-11-2022 (Youth Special)

இன்றைய தியானம்(Tamil) 28-11-2022 (Youth Special)

 

விலை மதிப்பற்ற பொக்கிஷம்

 

“உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” – லூக்கா. 12:34

 

போருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த அலெக்சாண்டர் தன் படைவீரர்களையும் பிரியமான நண்பர்களையும் அழைத்து தன் சொத்துக்கள், உடைமைகள் மற்றும் தனக்கு சொந்தமான யாவற்றையும் பிரித்து எழுதிய சாசனத்தை ஒப்படைத்தார். தனக்கென்று எதையும் அவர் வைத்துக்கொள்ளவில்லை. அவரது நண்பனான பெர்பிகாஸ் உனக்கென்று எதுவுமேயில்லையே என்று கேட்டதற்கு என்னிடம் “நம்பிக்கை” என்ற மாபெரும் பொக்கிஷம் இருக்கிறது என்றார்.

 

“நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது” (நீதி.23.18). எதை இழந்தாலும் தேவன் மீது வைக்கும் நம்பிக்கையை இழந்து போகாதேயுங்கள். நம்புவதற்கு ஏதுவில்லாத வேளையிலும் வயது சென்ற ஆபிரகாம்-சாராள் தம்பதியினருக்கு அவர்கள் நம்பிக்கையினால் ஈசாக்கைக் கொடுத்து வானத்து நட்சத்திரங்களைப் போல சந்ததியை பெருகப் பண்ணினார். தன் வாழ்க்கையில் நெருக்கங்கள், நம்பிக்கை துரோகங்கள் என பல ஆபத்துக்களை சந்தித்த சங்கீதக்காரனாகிய தாவீது “நீரே என் நம்பிக்கை” என்று சங்கீதம் 39:7 ல் சொல்கிறார். யோபுவின் வாழ்க்கையிலும் பல பாடுகள், சோதனைகள், இழப்புகள் இருந்தாலும் அவர் ஆண்டவர் மேல் வைத்திருந்த நம்பிக்கையினிமித்தம் இழந்த எல்லாவற்றையும் இரட்டிப்பாய் பெற்றுக் கொண்டார். யோபுவைப் போல் நாமும் கர்த்தர் மேல் முழு நம்பிக்கை வைத்துள்ளோமா?

 

எனக்கன்பானவர்களே! நாம் ஒவ்வொருவரும் நினைக்கலாம். எனக்கிருக்கும் போராட்டங்கள், வாழ்க்கையின் குழப்பங்கள், அநேக இழப்புகள், கடன் தொல்லைகள், கொடூரமான வியாதிகள், திருமணத் தடைகள், குழந்தை இல்லாமை, தொழில் நஷ்டங்கள், குடும்பப் பிரிவினைகள் இதெல்லாம் யாருக்குத் தெரியும்? நான் எப்படி விசுவாசத்தில் நிலைத்திருப்பது? என்பது போன்ற பல கேள்விகள் நம் மனதில் இருக்கலாம். ஆனால் பக்தன் பாடியதைப் போல “நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை” என்று பாடுங்கள். எரேமியா 29:11ல் கூறியுள்ளபடி நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவைகள் தீமைக்கல்ல சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. நம்மை முழுவதுமாய் கர்த்தர் பாதத்தில் ஒப்படைத்து ஏசாயா 40:31ல் சொல்லியுள்ளபடி, செட்டைகளை அடித்து எழும்புவோம்! அல்லேலூயா!

- Mrs. ஜாஸ்மின் பால்

 

ஜெபக்குறிப்பு:

கிராமிய நேரம் மற்றும் வாலிபர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் அநேகர் பயன்பெற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)