Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 27-11-2022 (Kids Special)

இன்றைய தியானம்(Tamil) 27-11-2022 (Kids Special)

 

சுட்டிப் பறவைகள்

 

“முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே” - யோபு12:12

 

ஒரு அடர்ந்த காட்டில் 10 பறவைகள் ஒன்றாய் ஒற்றுமையாய் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு பறவை மட்டும் வயதான பறவை. மற்றவை எல்லாம் இளம் பறவைகள். இந்த பறவைகளெல்லாம் ஒரு நாள், நாம் எல்லாரும் வீர சாகசங்கள் செய்து வாழவேண்டும் என பேசிக்கொண்டிருந்தன. அப்பொழுது முதிர்ந்த வயதுள்ள அந்த பறவை, “தேவையில்லாத இடத்தில் உங்கள் வீரத்தை காட்டினால் விபரீதமாக முடியும். எனவே எச்சரிக்கையாய் இருங்கள்’’ என்று கூறியது. உடனே மற்ற பறவைகளெல்லாம் சிரித்துவிட்டு, “பாட்டிக்கு வேலையே இல்லை. சும்மா ஏதாவது சொன்னால் தான் பொழுது போகும்” என்றன. 

 

ஒரு நாள், பரந்த வானில் அவை பறந்து சென்று கொண்டிருந்தன. அதில் ஒரு பறவை மட்டும் தரையில் விரிக்கப்பட்டிருந்த வலையை பார்த்துவிட்டது. உடனே அந்த பறவை மற்ற பறவைகளை கூப்பிட்டு, “அதோ கீழே பாருங்கள் ! வேடன் வலை விரித்திருக்கிறான். நாம் எல்லோரும் போய் அந்த வலையை தூக்கிக்கொண்டு வருவோம்” என்றது. உடனே மற்றொரு பறவை, “என்னது வலையை தூக்கிகொண்டு வரவா” என்று கேட்டது. இன்னொரு பறவை கூறியது, “இதுகூடவா தெரியாது. முற்காலத்தில் சில பறவைகள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. ஒரு நாள் தெரியாமல் வேடன் விரித்த வலையில் விழுந்து சிக்கின. பின்பு ஒற்றுமையாய் வலையைத் தூக்கிக் கொண்டு பறந்து விட்டன” என்றது. முதிய பறவையோ, “வேண்டாம் வினையை விலை கொடுத்து வாங்காதீர்கள்” என்று எச்சரித்தது. உடனே ஒரு இளம் பறவை, “சும்மா வர்றீங்களா, உங்க காலம் முடிஞ்சி போச்சு. இனி நாங்க சொல்றத கேளுங்க. இல்ல வீட்டிலேயே இருங்க” என்றது. எல்லா பறவைகளும் சேர்ந்து வலையை நோக்கிப் பறந்து அந்த வலையில் விழுந்தன. முதிய பறவையும் வேண்டா வெறுப்பாய் வலை மீது விழுந்தது. சிறிது நேரத்தில் ஒரு இளம் பறவை 1, 2, 3 சொல்ல மற்ற பறவைகளும் பறக்க முற்பட்டன. ஆனால் வலையும் வரவில்லை, இவைகளால் பறக்கவும் முடியவில்லை. அதற்குள் வேடனும் வந்துவிட்டான். பறவைகளைப் பார்த்து ஓகோ அன்றைக்கு ஏமாந்த வேடன் போல் என்னையும் நினைத்தீர்களா! எல்லோரும் எனக்கு இரையாக போகிறீர்கள் என்று சொல்லி ஒவ்வொரு பறவையாகக் கொன்றான். அதில் ஒரு பறவை மட்டும் சொன்னது, “அந்த பாட்டிக்கு கீழ்ப்படிந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா?” என்று.

 

அன்பு தம்பி-தங்கச்சி, நீயும் உனக்கு நல்ல ஆலோசனைகளைக் கூறும் பெரியவர்களின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் போனால், ஏதாவது விபரீதத்தில் மாட்டிக்கொள்வாய். ஆகவே வீட்டிலுள்ள பாட்டி-தாத்தா, அம்மா-அப்பாவின் வார்த்தையை அசட்டை பண்ணாதே. OK

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)