இன்றைய தியானம்(Tamil) 25-11-2022
இன்றைய தியானம்(Tamil) 25-11-2022
எழுந்து ஒளிவீசு
“இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.’’ – 2 தீமோத்தேயு 1:6
ஒரு சமயம் ஒரு பள்ளியைப் பார்க்க பிரமுகர் ஒருவர் சென்றிருந்தார். தலைமை ஆசிரியர் ஒரு மாணவனைச் சுட்டிக்காட்டி ‘’எங்கள் பள்ளியில் இவன் ஒருவன்தான் முட்டாள்’’ என்று கூறியவுடன் மற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் நகைத்தனர். சற்று நேரம் கழித்து பிரமுகர் வீடு திரும்பும்போது அந்த முட்டாள் மாணவனை பள்ளியின் காம்பவுண்ட் வரை அழைத்துச் செல்ல தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டார். பிரமுகர் அன்போடு அந்தப் பையன் தோள்மீது கையைப் போட்டு அழைத்துச் சென்றார். போகும்போது ‘’தம்பி! மற்றவர்கள் சொல்வதைப் பொருட்படுத்தாதே நீ உலகப் பிரசித்தி பெற்றவனாகக் கூடும் நீ நன்றாகப் படி’’ என்று சொல்லி அவனைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். அந்த வார்த்தைகள் அவனுக்குள் மின்சாரம் போலப் பாய்ந்தது. அவன் நன்றாகப் படித்து பிரசித்தி பெர்ற வேத சாஸ்திரி ஆனான். அவர் தான் ‘’ஜார்ஜ் ஆதம் ஸ்மித்” என்ற வேத சாஸ்திரி. அந்தப் பிரமுகரின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் அல்லவா அவனை வேத சாஸ்திரி ஆக்கிற்று.
பவுல் அப்போஸ்தலனின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் பெலவீனமான பயந்த சுபாவமும் உள்ள தீமோத்தேயுவை சபைகளைக் கண்காணிக்கிற தலைவனாக்கியது. ‘’நான் என் ஜெபங்களில் உன்னை தினமும் நினைத்து, உனது மாயமற்ற விசுவாசத்திற்காக கர்த்தரைத் துதிக்கிறேன்’’ என்கிறார். “அந்த விசுவாசம் உன் பாட்டியிடமும் உன் அம்மாவிடமும் நீ கற்றுக்கொண்டது. அதில் நிலைத்திரு’’ என்று கூறுகிறார். தீமோத்தேயுவுக்கு இருக்கிற தேவ வரங்களை, போதக வரம், தலைமைத்துவப் பண்பு, சுவிசேஷம் அறிவிப்பதற்கான வைராக்கியம் ஆகியவற்றைப் பற்றி அசதியாக இராதே, அனல் மூட்டி எழுப்பிவிடு. வேத வசனத்தை தினமும் வாசி (1தீமோ.4:14) என்று நினைப்பூட்டுகிறார். இவ்வாறாக உற்சாகமூட்டி தீமோத்தேயுவை சிறந்த தலைவனாக்குகிறார்.
ஆம் பிரியமானவர்களே! நம்மையும் கூட சிறந்தவர்களாக உருவாக்குவது எது? நம்மிடம் உள்ள கீறல் இல்லாத விசுவாசம் நம் அம்மாவிடம், பாட்டியிடமிருந்து கற்றது அல்லது சுத்த இருதயத்துடன் கர்த்தரைத் தொழுது கொள்கிறவர்களிடமிருந்து கற்றது. அந்த விசுவாசம் நம்மில் நிலைத்திருக்கிறதா? நமது வரங்களை அனல் மூட்டி எரிய விடுகிறோமா? ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது சுவிசேஷம் அறிவிப்பதற்காக ஒதுக்கி ஏதாவது ஒரு வகையில் இயேசுவை அறிவிக்கலாமே. கல்வி கற்றவராயின் Tuition மூலம் சிறுபிள்ளைகளுக்கு அறிவிக்கலாம் அல்லது கைப்பிரதிகள் கொடுக்கலாம். எழுந்து ஒளிவீசுங்கள்.
- A. பியூலா
ஜெபக்குறிப்பு:
எழுப்புதல் வாலிபர் மாலையில் முன்குறிக்கப்பட்ட வாலிபர்கள் பங்குபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250