Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil) 13-08-2022

இன்றைய தியானம்(Tamil) 13-08-2022

 

குழந்தைத் தொழிலாளர்கள்

 

“…அழுகிறவர்களுடனே அழுங்கள்.” – ரோமர் 12:15 

 

நம் நாட்டில் நிலவும் வறுமை காரணமாகத் தோன்றிய சமுதாயச் சீர்கேடுகளில் ஒன்றுதான் குழந்தைத் தொழிலாளர்கள். குறிப்பிட்ட வயதைக் கடந்தவுடன் குழந்தைகளை வளர்க்க முடியாமல் பெற்றோர், தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பிவிடுகின்றனர். பிள்ளைகள் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆவதாலும், சிறுவயதிலேயே வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.        

 

வீடுகளிலும், உணவகங்களிலும், தொழிற்சாலைகளிலும் குழந்தைகளின் உழைப்பு சுரண்டப்படுகிறது. பட்டாசு, தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் குழந்தைகள் சுவாசக் கோளாறுகள் மற்றும் தோல் நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும் ஆளாகின்றனர். தொழிற்சாலைகளில் விபத்துகளிலும் மரிக்கின்றனர். சரியாக வேலை செய்ய முடியாமற்போனால் துன்புறுத்தப்படுகின்றனர். சிறுமிகள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர். குழந்தைகளின் மென்மையான விரல்கள் லேஸ் (Lace) தொழில்களுக்கு உகந்ததாக இருப்பதால் 4- வயதுடைய சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். நாளடைவில் அவர்களுக்குக் கண் பார்வை மங்குகிறது. முதுகு வளைந்து விடுகிறது. குழந்தை பருவத்தின் மகிழ்ச்சி, விளையாட்டு அனைத்தையும் குழந்தைகள் மறந்துவிடுகின்றனர். அவர்களது மனம் கடினப்பட்டு விடுவதால், வளரும்போது குற்றவாளிகளாகி விடுகின்றனர்.

 

கர்த்தருடைய இருதயத்தை உடைக்கும் இந்தக் காரியம் நம் உள்ளத்தையும் உடைக்க வேண்டும். நாம் உடைந்த உள்ளத்தோடு பின் வரும் குறிப்புகளுக்கு ஜெபித்தால் சர்வ வல்லவர் சூழ்நிலைகளை மாற்றுவார்.

 

1. வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க.

 

2. ஏழைகளுக்கு மானிய விலையில் உணவும், அத்தியாவசியப் பொருள்களும் வழங்கப்பட.

 

3. இலவசப் பொருள்கள் ஏழைகளுக்குத் தடையின்றி கிடைக்க.

 

4. ஏழைப் பெற்றோர்களுக்கு தகுதியான வேலை தர, எல்லா குழந்தைகளும் பள்ளியில் சேர, பாதியில் கல்வியை நிறுத்தும் குழந்தைகள் மறுபடியும் படிப்பைத் தொடர, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க.

 

5. அனாதைக் குழந்தைகளுக்கு தங்க புகலிடம் கிடைக்க.

 

ஜெபிப்பது மாத்திரமல்ல, குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதைத் தடுக்க நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும். சிறுவர்களை குறைந்த சம்பளம் கொடுத்து நம் வீட்டில் வேலைகளுக்கு அமர்த்தக் கூடாது. வசதிப்பட்டால் அவர்கள் கல்வி பயில நாம் உதவ வேண்டும். ஸ்காலர்ஷிப் உதவிகள் பெற்றுத்தர வேண்டும்.

அன்பானவர்களே, இவற்றைச் செய்தால் கர்த்தர் நம் பேரில் களிகூருவார்.

- Mrs. கீதா ரிச்சர்ட்

 

ஜெபக்குறிப்பு:

சீர்காழியில் நடைபெறவுள்ள “எழுப்புதல் விரும்புவோர் முகாம்” – ல் எழுப்புதலை வாஞ்சிப்போர் அதிக அளவில் பங்குபெற, எழுப்புதலடைய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin


Comment As:

Comment (0)